Friday, July 31, 2009

உப்புத்துப்பியும் ஒலக சினிமாவும்


"என்னடா படமெடுக்குறாய்ங்க? அதே ஈரோ அதே ஈரோயினி. அதே பாட்ட மறுக்கா மறுக்கா போடுறாய்ங்க. என்னால இதெல்லாம் பாக்க முடில மக்கா.
நான் என்ன படிச்சிருக்கேன் சொல்லு. ரெண்டாப்புலயெ பொம்பளக வாத்திச்சிகிட்டெல்லாம் படிக்க கூடாதுனுட்டு எங்க அய்யா கூட்டியாந்துட்டாக. கிரகம் அவகளும் படிக்கல என்னையும் படிக்கவுல்ல. ஆனா நல்லவேளடா.. படிக்காததும் நல்லதுதேன். படிச்சிருந்தா கம்பூட்டரு முன்னாடியே உக்காந்து முதுகு வலி வந்துருக்கும்டா. இப்பல்லாம் சென்னையில அத்தன பயலும் முதுகுவலிக்காரனாம்ல, சுப்பையன் பாத்துட்டு வந்து சொன்னான். கிறுக்குப் பயலுவ. கம்பூட்டருனு ஒன்னு வெள்ளக்காரன் கண்டுபுடிச்சாலும் புடிச்சான், நம்ம பயலுவ அது முன்னாடியே பலியா கிடக்கானுவ. நமக்கு அதெல்லாம் வேணாம்டா.
நல்லா ஓடியாடி வேல பாத்தாதான் நமக்கு வசப்படும்"

பொறுமையா இருங்க, கோபப்படாதீங்க. அங்க குளத்து படிக்கட்டுல சின்னப்பயலுக கிட்ட பேசிகிட்டிருக்குறது நம்ம உப்புத்துப்பி ராமசாமி. பழக்கடை
மாணிக்கம் மகன். ஆனா அவரு இவன மகன்னு சொல்லுறதே இல்ல. ரெண்டு பேரும் பொது இடத்துல பார்த்துகிட்டா மூணாம் பங்காளி, நாலாம் பங்காளி கணக்கா முறைச்சுக்குவாங்க. நமக்கு ஒன்னும் புரியாது. இப்படித்தான் ஒருநாளு சடகோப்பன் ரெண்டு பேருக்கும் சமாதானாம் பண்ணி வைக்கிறேன் பேர்வழினு போயி, அப்பனும் மகனும் சேர்ந்து மொத்திபுட்டாங்க. வாயில ரத்தத்தோட வந்தான் பாவம். நமக்கு ஏன் வம்புனு ஊருக்குள்ள அப்புறம் எவனுமே இவங்க பஞ்சாயத்துக்கு போறதேயில்ல. ராமசாமிக்கு ஏன் 'உப்புத்துப்பி'னு பேரு வந்துச்சுனு இப்போ நான் சொல்ல ஆரம்பிச்சேன்னா அப்புறம் கதைய முடிக்க முடியாது. போறபோக்குல தெரியும். விசயத்துக்கு வருவோம். நேத்து நைட்டு சேது டாக்கீசுல போன வருசம் ரீலீசான ஏதோ ஒரு படத்த பார்த்துட்டுதான் விமர்சனம் பண்ணிகிட்டிருக்கான். பரதேசி இன்னும் பல்லு கூட விலக்கல, ஏன்டானு கேட்டா, "ஆமா. பல்லு விலக்குறவய்ங்க மட்டும் நல்ல படம் எடுத்துட்டாய்ங்களாக்கும்"னு கேப்பான். நமக்கெதுக்கு அதெல்லாம். பேசாம அவன் பேசுறத கேட்டுத் தொலைப்போம்.

"............ ஆமா அது என்னடா, ஈரோ வந்தோன ஒரு பாட்டு வைக்கிறாய்ங்க. உடனே எல்லாம் எந்திரிச்சு ஆடுறாய்ங்க. படிக்கிற பயலுக அத்தன பேரும் பரீட்ச பேப்பர கிழிச்சு வானத்துல வுட்றான் ஏதோ காசு கொடுத்து பூ வாங்குன மாதிரி. இவய்ங்கள்லாம் படிச்சு.. உருப்பட்டு..எங்க போயிச் சொல்ல. இந்த பூ போடுறதெல்லாம் நல்ல படத்துக்கு போட்டாலும் பரவால்ல. நம்மூருல எவன் நல்ல படம் எடுக்குறான்? எல்லாம் அதே கதைதான். இவன் எடுத்து முடிச்சுட்டு கதை பேப்பர அடுத்தவன்ட தர்றான். அவன் ஈரோ ஈரோயின மாத்தி அதே கதைய எடுக்குறான் நம்மலும் மூணு மூணு ரூவாயா கொடுத்து பாக்குறோம் கண்றாவி.. இதுல சேருக்கு தள்ளுமுள்ளு வேற. நான் முடிவு பண்ணிட்டேன்டா. காரக்குடில பல ஒலக சினிமா பார்த்தவன்தான் நானு. இப்பகூட அமீர்கான்னு ஒரு வெள்ளக்காரன் எடுத்த கஜினினு ஒரு படம் பார்த்தேன். அதப் பாத்துதான் நம்ம ஊர்ல சூர்யாவ வச்சு எடுத்தாய்ங்களாம். ஆனா என்ன, எழவு நமக்கு அந்த பாசை தான் புரியல. இன்னிக்கு ராவே கிளம்பி சென்னை போறேன், ஒரே வாரம்தான். படம் எடுக்குறேன். அருமையான கதை ஒன்னு இருக்கு. ஈரோ ரெட்ட வேசம். என் சிநேகிதன் சிவமுத்து சென்னைலதான் இருக்கான். அவனப் போயி பாக்குறேன். பிறவு நேரா ஏவிஎம் போறோம், ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரப் பார்த்து கதையச் சொல்லி, பெரிய இயக்குனரா ஆயித்தான்டா ஊருக்கு வருவேன். இது எங்கப்பன் மாணிக்கம் மேல சத்தியம்டா"

இப்படிச் சொல்லிவிட்டு அப்படியே குளிக்காமல் கொள்ளாமல் கட்டுன கைலியோட பஸ்சு ஏறுனவன பார்த்து "அண்ணே போயிட்டு வாண்ணே.
பெரியாளானவுடன எங்கள மறந்துறாதண்ணே."னு சொல்லி கையசைச்சு அனுப்பி வச்ச சிறிசு ரெண்டும் அவன் போனோன பேசிகிச்சுங்க,

"போடி போ.. அடிபட்டு வரப் போற.. கடலைய எங்கப்பா கடையில களவாண்டு தின்னாய்ல.. உனக்கு மெய்யப்ப செட்டியார் செத்ததே தெரில. இதுல ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்னு இனிசியலோட வேற சொல்ற!!!"
.........

இரண்டு நாட்களுக்குப் பிறகு.

வாயில தையல் போட்டு ஊருக்கு வந்திருக்க உப்புத்துப்பிய பத்திதான் ஊரெல்லாம் பேச்சு. ஆனா அவனோ வந்ததுல இருந்து யாருகிட்டயும் பேசவே
இல்ல. எதோ யோசிக்கிற மாதிரி, வீட்டுல இருந்தா விட்டத்தையும், வெளில இருந்தா மரக்கிளையவும், வானத்தையும் மாறி மாறி வெறிச்சு பார்த்துட்டே இருக்கான். அவங்கப்பன், "கொரங்குப்பய ஒரு வாரத்துல வயிறு காய்ஞ்சு வருவான்னு நினைச்சேன். ரெண்டே நாள்ல வந்துட்டானே. வாயில வேற தச்சு அனுப்பிருக்காய்ங்க. என்னத்தப் பண்ணித் தொலைச்சான்னு நமக்கும் தெரில. கேட்டா வெறிச்சு பார்த்துட்டு எதையோ யோசிச்சுட்டே நடந்து போயிறான்."னு ஊரெல்லாம் புலம்பிட்டிருக்காரு. என்ன ஆச்சுனு யாருக்கும் தெரில. அவனும் சொல்லல. பொம்பள புள்ளைகள்லாம் அவன 'அறுந்த வாய்' ராமசாமினு கிண்டல் பண்ண ஆரம்பிச்சவுடன அவனச் சுத்தி இருக்க சிநேகித பயலுக கடுப்பாயி ஒருநாளு சென்னையில இருக்க சிவமுத்துக்கு ஃபோன் போட்டு விசயத்த கேட்டுருக்காய்ங்க. அவன் இவய்ங்களுக்கு மேல கடுப்பா,

"அந்த கருமம் புடிச்சவன் இனிமே சென்னைக்கு வந்தா செத்தே போயிருவான்டா. நானே அடிச்சுக் கொன்னுபுடுவேனு சொல்லிருங்கடா அவன்கிட்ட. மனுசனாடா அவன்? "மாப்ள படமெடுக்கப்போறேன்டா. அருமையான கதை இருக்கு. மெய்யப்பச் செட்டியாருட்ட கூட்டிப் போடா"ன்னான். மெய்யப்பச் செட்டியாரு செத்துட்டாருனு அவனுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளயே எனக்கு நாக்கு தள்ளிருச்சு. அப்புறமா நம்ம கூட ரெண்டாப்புல படிச்சபய, அந்தக்காலத்துல கோக்குமாக்க இருந்தாலும் இப்ப ஏதோ திருந்தி வாழ்க்கைல முன்னேறனும்னு வந்திருக்கானு நினைச்சு என் கூட தங்கிருக்க வசதியான பய ஒருத்தன் கைல கால்ல விழுந்து, அவனுக்குத் தெரிஞ்ச ஹீரோ ஒருத்தன்ட கூட்டிப்போனேன்டா.. அங்க வந்து இவன்..... "

"என்னடா பண்ணான்? சொல்லுடா..."

"அதை அந்தக் கபோதி கிட்டயே கேளுங்கடா"னுட்டு ஃபோன வச்சுட்டான்.
இவய்ங்களுக்கு இப்போ ஆர்வம் தாங்க முடில. உப்புதுப்பி என்ன பண்ணானு தெரிஞ்சாதான் சோறு இறங்கும்ன்ற நிலைக்கு வந்துட்டாய்ங்க.

உப்புதுப்பிட்ட கெஞ்சி கெதறி ஊரணி படிக்கு கூட்டியாந்து,அவன்கிட்ட,

"அப்படி என்னதான்டா நடந்துச்சு சென்னையில? என்னதான் பண்ணித் தொலைச்ச? நீ சொன்ன கதை ஹீரோக்கு புடிக்கலயா? புடிக்கலேனா கூட,
அதுக்காக அடிக்க மாட்டாய்ங்களேடா. அடிக்கிற அளவுக்கு என்னடா பண்ண?"னு கேட்டதுக்கு,

"மாப்ள, அவன் கூட்டிப்போன ஈரோக்கு அன்னிக்கு கோபிசெட்டிப்பாளையத்துல படப்பிடிப்பாம்டா. சிவமுத்து சிநேகிதனுக்கு அவரு ரொம்ப வேண்டப்பட்டவருன்றதால படப்பிடிப்புக்கு கூட போகாம என்கிட்ட கதை கேக்குறதுக்காக வரச் சொல்லிருந்தாருடா. நாங்களும் போனோம். காபித்தண்ணியெல்லாம் நல்லாதான் கொடுத்தாய்ங்க. பாக்கவும் சுமாரா இருந்தாரு. முழுக்கதையவும் கேட்டுட்டு பிறவு புடிக்காம அடிச்சிருந்தா கூட
பரவால்லடா. நான் ஒரு வரிதான்டா சொன்னேன். திடீர்னு ரெண்டு பேரு வாயிலயே அடிச்சு என்னைய விரட்டி விட்டாய்ங்கடா"

"என்னடா சொன்ன?"

"சார். படத்துல நீங்க டபுள் ஆக்ட்டு சார். ஹீரோ, கதாநாயகன்னு ரெண்டையுமே நீங்கதான் பண்றீங்க"ன்னு சொன்னேன்டா. இதக் கேட்டவுடன ஒருநிமிசம் என்ன மேலயும் கீழயும் பார்த்துட்டு, வாயில அடிச்சுபுட்டாய்ங்கடா. நானும் ஏன் அடிச்சாய்ங்கன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன். ஒன்னும் புரியலடா மாப்ள."

இதக் கேட்டவுடன, கூடியிருந்த அத்தனைப் பேரும் ஒருத்தனை ஒருத்தன் பார்த்துட்டு களைஞ்சு போயிட்டாய்ங்க, நம்ம உப்புதுப்பி ராமசாமி மட்டும்
யோசிச்சிட்டே அதே படியில உக்காந்திருக்கான். இன்னும்!!!!!!

Wednesday, July 29, 2009

காதலைக் கிழித்தவளுக்கு காதலுடன்.....


என் காதலிக்கு...

நீ காதலி, அன்புடையவள் அல்ல என்பதை அறிவேன். இந்த அறிதலின் மேல் வைத்த காதலில் மட்டுமே இந்தக் கடிதமேயொழிய உன் மேல் காதல் துளியும் கிடையாது. கண்ணாடியில் கல் எறிந்து, அது உடைவதை வேடிக்கைப் பார்க்கும் குழந்தையைப் போல நீ என்னைக் காதலிக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறாய். நான் நொறுங்கி விழுந்த பொழுதுகள் அத்துணையிலும் உன் கால் என் கண்ணீர் துகள்களில் பட்டுக் கிழியாமல் இருப்பதற்காக சற்று தள்ளியே நொறுங்கியிருக்கிறேன்.

கடல் அலைகளில் பெயர் எழுதுவது வேடிக்கையென்றேன். நீ கேளாமல் எழுதி, நம் காதலை அலைகள் தழுவட்டுமென்றாய். அவைகளோ அழித்துப் போயின, அழிந்தும் போயின.
உன் கோபங்கள் எப்பொழுதுமே, தூக்க மறுத்த அம்மாவிடம் குழந்தை காட்டும் கோபம் போல்தான் என நினைத்து, ஏமாந்து போன குழந்தை நான். உன் கோபங்கள் பக்கத்து வீட்டுக்காரனது போன்றவை. நெஞ்சம் கொஞ்சமும் அல்லாது, வஞ்சமும், பாச வறட்சியும் மட்டுமே நிறைந்தது.

எதிர்பார்த்தாய். ஏமாந்துபோனாய். கோபப்பட்டாய். வெளியேறினாய். காதலிக்க மட்டும் இல்லவே இல்லை. என்னைக் காதலிப்பதாய் அடிக்கொரு முறை என் கைப்பற்றி சொன்னாலும் கூட, அடிப்பாவி நீ காதலிக்கவே இல்லை.
நீ ஏன் பிரிந்தாய் என எழுதவோ, சொல்லவோ நேரமில்லையெனக்கு. அது பிடிக்கவுமில்லை. ஏன், எனக்கு அது தெரியவே தெரியாது!!
இன்று இதை எழுதுவதும், நீ இல்லாது, நான் எப்படியிருக்கிறேன் எனத் தெரியத்தான். எனக்கும், உனக்கும், நமக்கும், உலகத்துக்கும்.

உன்னைக் காதலிக்க ஆயிரம் காரணம் இருந்தது என்னிடம். உன்னைப் போன்ற மகள் வேண்டும் என்பதில் இருந்து உன்னையே மகள் போல் பாதுகாக்க வேண்டுமென்பது வரை. உன்னைப் பற்றி எனக்கு எல்லாமும் தெரியுமென்றே நினைத்திருந்தேன். எல்லாம் அல்ல எதுவுமே தெரியாது எனப் புரிந்தது என்னையும் காதலையும் ஏதோ முகம் துடைக்கும் காகிகதத்தைப் போல் நீ எறிந்தபோது. நைந்துபோனேன் நான். கிழிந்துபோனது காதல்.

காதலி பிரிந்ததற்காக உயிர் விடும் ஆண்மையில் அழுக்குப் படிந்த ஆண் நான் கிடையாது. எனக்கானவள், எனக்கருகில் இருந்த நீ அல்ல எனத் தெளிவாய் உணர்த்திச் சென்றிருக்கிறாய். இத்தனை பெண்களில் எவள் என்னவள் எனத் தெரியாவிடினும், நீ அவள் கிடையாது எனக் கூறிச்சென்றிருக்கிறாய். எதற்காய் உயிர் விட?

உலகில் உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களென எனக்குத் தெரியும். அவர்களுக்கு உன்னைப் போல் அல்லாது, கொஞ்சமேனும் அன்புக்கு அர்த்தம் தெரிந்திருக்கக்கூடும். அவர்களில் யாரோ ஒருத்தி எனக்கானவளாக இருக்கலாம். நினைக்கையில் மனம் திரும்பப் புதிதாய் பிறக்கிறது. உயிர்போகும் வலி கொடுத்து உடலில் இருந்து பிய்ந்து போகும் நகம் போலத்தான் தோற்றமளிக்கிறாய் நீ. எதற்காக உயிர் விட?

எப்போதாவது நாம் உறவாடிய பொழுதுகள் உன் நெஞ்சைத் துளைத்து என்னிடம் வருவாயென என் 'இரு'தயத்தின் 'ஒரு தயம்' சொல்லும் போதெல்லாம், அவசரமாய் என் 'மறு தயம்' கேட்கிறது, "மீண்டும் செத்துப் போகப்போகிறாயா?" என்று. எனது ஆனந்தம் ஆரம்பமாவதும், முடிவுறுவதும் எனக்குள் தான், எனக்குள் மட்டும் தான் என தாமதமாய் உணர்த்தினாலும் சரியாக உணர்த்திப் போயிருக்கிறாய். நான் உயிருடன் இருக்கும் போது, பின் எதற்காக உயிர் விட?

உனக்காய் நான் செய்து வைத்த மனைவிக்கான அரியணையில், நீ, அனுபவம் எனும் பூவை வைத்துவிட்டுப் போயிருக்கிறாய். உன்னைக் காதலித்ததைவிட அதிகமாய் நாளை என் மனைவியைக் காதலிக்கக் கற்றுக் கொடுக்கும் அந்தப் பூ. பின் எதற்காக உயிர் விட?

உண்மையாய் காதலிக்காமல் பிரிந்து சென்ற நீயே, என்னைக் காதலிக்க வைக்க முடியுமெனில். நாளை என்னை உண்மையாய் காதலிக்கப் போகிறவள் என்னை என்செய்ய வைப்பாளோ? அதை அனுபவிக்காமல் நான் ஏன் உயிர் விட?

அழகும், அன்பும், காதலும், காமமும் சரியாய் கலந்து நாளை நான் பெறப்போகும் குழந்தையின் கொஞ்சல்களைக் கேட்காமல் செத்தொழிந்து போனால் என் ஆறரிவில் அர்த்தமில்லை என்றே அர்த்தம்.

ஆனாலும்.....

அவ்வப்போது நான் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, என்
தலைக் கவசத்துக்குள் வந்து போகும் உன் கூந்தல் வாசம். லேசாய் என்னை அழவைத்துப் பார்க்கும்.
என் பணப்பையில் எப்போதோ நான் வைத்த உன் புகைப்படம் மங்கிப் போய் இருக்கும், இன்னமும். அதை எடுத்தெறிய எத்தனிக்கும் போதெல்லாம் இன்னும் மங்காமல் மனதின் மூலையில் ஒட்டியிருக்கும் உன் நினைவுக் குப்பைகளில் ஏதோ ஒரு குப்பை என்னைத் தடுக்கும்.
இவை மட்டுமே நான் உன்னை உண்மையாய் காதலித்ததை இன்னமும் எனக்கு சொல்லிக் கொண்டிருப்பவை. காதலிக்கத் தெரிந்தவன் நான், என எனக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை.
உலகில், மனித கலாச்சாரத்தில் அரிதாய்ப் போன 'காதல்' என்னும் கலையை கற்று தெரிந்த நான், ஏன் உயிர் விட வேண்டும்?

Monday, July 27, 2009

சுஹா'சனி'யின் பேசும் படம்."எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டக் கேக்கும்"னு தல வடிவேலு பாடுனதுதான் ஞாபகம் வருது. நம்ம சுஹாசினி அம்மாவின் 'எட்டணா', அவங்க கணவர் மணிரத்னம். மணிரத்னம் மனைவின்னா உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர்னு நினைப்பு! ஊரே இந்தம்மா பேச்ச கேக்கும்னும் நினைப்பு! விஜய் டிவியின் 'மதன்'ஸ் திரைப்பார்வை'யைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையா சுஹாசினி போட்டுகிட்ட சூடுதான் 'சுஹாசினி பேசும் படம்'. மேட்டருக்கு வருவோம்.

இந்தப் பதிவ நான் எழுதக் காரணம், இந்தம்மா 'தோரணை' படத்தை விமர்சனம் செய்த விதம் தான். ஒரு 'Gentleman behaviour'னு சொல்லப்படுற நாகரீகத் தன்மை கூட இந்தம்மாகிட்ட கிடையாதுனு அன்னைக்குதான் தெரிஞ்சுகிட்டேன். தோரணை படத்துல சந்தானத்தோட காமெடி பத்தி இந்தம்மா சொன்ன வார்த்தைகளை பாருங்க, "சந்தானம்கிட்ட நான் ஒன்னு கேக்குறேன். நீங்க பண்ற காமெடி மிகவும் மட்டமா இருக்கு. நீங்க யாரையும் கிண்டல் பண்ணாம காமெடி பண்ணுங்க, நாங்க எங்க பொண்ணையும் கட்டிக் கொடுத்து, எங்க ராஜ்ஜியத்துல பாதியையும் கொடுக்குறோம்"னு லூசுத்தனமா சொன்னுச்சு. கிட்டத்தட்ட மர கழண்ட கேசு மாதிரி பேசுது. தோரணை படத்துல என்ன மேட்டருன்னா டாப் டென்ல வர்ற குண்டு ஆர்த்திய, சந்தானம், குண்டு, அது இதுனு கிண்டல் பண்ணுவாரு. அதுக்குத்தான் சந்தானத்துக்கு இந்த அர்ச்சனை. இன்னும் அந்தம்மா கேவலமா என்னென்னமோ சொன்னுச்சு, எனக்கு பாதி மறந்துருச்சு. இப்போ அந்தம்மாவ பத்தி பார்ப்போம்.

"ஓடக்கார மாரிமுத்து, ஓட்டவாயி மாரிமுத்து" பாட்டுல 'ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போன கதையென்னாச்சு'னு வரி வரும். இன்னும் பல பேர கிண்டலா வர்ணிச்சு அந்தப் பாட்டுல வரிகள் இருக்கும். இதுல காமெடி என்னன்னா, அந்தப் பாட்டு இடம்பெற்ற படம் இந்தம்மா இயக்கிய 'இந்திரா'!!!! இந்திராவை இயக்குறப்ப (அந்தப் படம் இயக்குனது மணிரத்னம், அத விட்டுருவோம்.) இந்தம்மாக்கு யாரையும் கிண்டல் பண்ணக்கூடாதுங்குற ஞானோதயம் இல்லையா?

தலைவர் கவுண்டமணி, செந்திலையும், மத்தவய்ங்களையும் கிண்டல் பண்ணாம காமெடி பண்ண படம் எதாச்சும் ஒன்னு இருக்கா? சொல்லப்போனா கவுண்டரு கிண்டல் பண்றதை பட யூனிட்ல உள்ள அத்தன பேரும் ரசிப்பாங்கன்னு சத்யராஜ் சொல்லி பல தடவ கேட்ருக்கோம். இந்தம்மா, நம்ம தலைவர் கவுண்டமணிய பத்தி இதே வார்த்தைகளை சொல்லிருமா? சொல்லிட்டு தெருவுல நடமாடிருமா? பிச்சுருவோம் பிச்சு! :-))

ஆர்த்தின்ற பொண்ணு குண்டா இருக்குறதுதான் அது சினிமால நடிக்கிறதுக்கு முதல்காரணமே. அதன் 'முதலே' அதோட குண்டு உடம்புதான். ஆர்த்தியோட உடல்வாகு கிண்டலடிக்கப்படுவதை அந்தப் பொண்ணே கண்டுக்குறதில்ல, மேலும் அதுவே கூடபலதடவை கிண்டலடிச்சிருக்கு. ஆனா இந்தம்மா அதைப் பெரிய தப்பு மாதிரி டிவில பேசுறதுதான் அந்தப் பொண்ணை கஷ்டப்படுத்தும்.

சமீபத்துல என்னை பயங்கரமான அதிர்ச்சில ஆழ்த்துன விஷயம், சுஹாசனி ஒரு தேசிய விருது வென்ற நடிகைன்ற படு கொடூரமான செய்திதான். ரிக்ஷாகாரன் படத்துக்காக எம்.ஜி.ஆர் தேசியவிருது வாங்குன செய்தி கூட என்னைய இந்தளவு அதிர்ச்சில ஆழ்த்தல. இந்தம்மா அவார்டு ஜெயிச்ச படம் 'மனதில் உறுதி வேண்டும்'. அதுல இந்தம்மா நடிப்புன்ற பேருல ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அதைப் பார்க்கவே நமக்கு மனதில் உறுதி வேண்டும். அப்புறமா விசாரிச்சதுல தெரிஞ்ச விஷயம் என்னன்னா, இந்தம்மாவோட சொந்தக்காரய்ங்க அந்த வருஷ தேர்வாளர்கள் கமிட்டில உறுப்பினர்களாம். அந்த செல்வாக்குல கிடைச்ச விருதுதான் அதுவாம். இதுவே பெரிய தில்லாலங்கடி, இதுக்கு சந்தானத்தை கேவலமா கேள்வி கேக்க என்ன உரிமை இருக்கு. சந்தானம் சினிமாக்கு வந்ததே லொள்ளு சபால மத்தவங்கள கலாய்ச்சுதான். இந்தம்மா சந்தானத்துகிட்ட வேற என்னத்த எதிர்பார்க்குதோ கிரகம் தெரில..!!

இன்னொன்னு இந்தம்மாகிட்ட இருக்குற ஒரு நல்லப் பழக்கம் என்னன்னா, இயக்குனர்களைக் கூப்பிட்டு அவங்க முன்னாடி நல்ல புள்ள மாதிரி பேசிட்டு, அவய்ங்க போனவுடன அசிங்க அசிங்கமா திட்டும். வாயிலயே வயலின் வாசிக்கும்!! இதெல்லாம் ரொம்ப டீசன்ட்டான வேல போல! மதனோட விமர்சன நிகழ்ச்சில இருக்கும் ஒரு நாகரீகம் இந்தம்மாவோட நிகழ்ச்சில சுத்தமா இருக்காது. சும்மா வீட்டுல இருந்த அம்மாவ கொண்டு வந்து விமர்சனம் பண்ணுனு சொன்னவுடன அந்தம்மாக்கு தலகால் புரில. லூசு மாதிரி (மன்னிக்கனும் நண்பர்களே இதைத் தவிர வேறு சரியான வார்த்தை கிடைக்கல) "பொண்ணக் கட்டித் தர்றோம், ராஜ்ஜியத்துல பாதி தர்றோம்"னு சொல்லுதே இந்தம்மா, பெரிய மைசூர் மகாராணினு நினைப்பு! நாளைக்கு சந்தானம் ஒரு ஜோக்கு சொல்லி சிரிக்க வச்சாருன்னா இந்தம்மா என்ன பண்ணும்? இதுகிட்ட பொண்ணும் கிடையாது, ராஜ்ஜியமும் கிடையாது, கட்டுனா இதத்தான் கட்டனும்!!! அத நினைச்சுதான் சந்தானம் ஜோக்கே சொல்லல போல!

உலக சினிமாவையெல்லாம் மூஞ்சிய சீரியசா வச்சிகிட்டு விமர்சனம் பண்ணும் பாருங்க, தாங்க முடியாது. உச்சகட்ட காமெடி என்னன்னா நிகழ்ச்சி முடிஞ்சவுடன காய்கறி விக்கிற மாதிரி ஒரு தராச கொண்டு வந்து எடை வேற போடும். இது எடுத்த, இது நடிச்ச படத்தையெல்லாம் எடை போடனும்னா எங்க போயி போடுறது? குப்பைலதான் போடனும். அதுவும் இந்தம்மா வசீகரா படத்துல அழுதுகிட்டே ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க.. அய்யோ யம்மா....!!!!!!!!!

இந்தம்மாக்கு நடிப்பும் வரல, இயக்கமும் வரல, விமர்சனமும் வரல!!
மொத்தத்தில் 'சுஹாசினியின் பேசும் படம்', ரசிகர்களுக்கும், சினிமாவுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் பிடித்த சனி!!! 


Saturday, July 25, 2009

நண்பன், காதலி, கோழிக்குழம்பு மற்றும் டைரி


"என்ன இப்ப? ஒன்னும் ஆகல.. அவதான் உன்ன வேண்டாமுனு விட்டுப் போயிட்டால விட்றா...."

"அது எப்படிடா முடியும்? கல்யாணம் எங்க நடத்தனும்ல இருந்து பொறக்குற குழந்தைக்கு பேரு வைக்கிற வரைக்கும் என்கூட பேசிருக்காடா. எப்டிடா மனசாட்சியே இல்லாம இப்டி நடந்துகிட்டா?"
பையன்தான்னு அவ சொல்லுவா, பொண்ணுனு நான் சொல்லுவேன். அதுக்கு கோச்சுகிட்டு நாலு நாள் பேசாம இருந்தாடா என்கூட. இன்னிக்கு என்ன விட்டுட்டு எப்படிடா போக முடிஞ்சிச்சு அவளால..."

"சரி. இப்போ என்னடா அதுக்கு?"

"கண்ண மூடுனா அவதான்டா வர்றா. பயமா இருக்குடா செத்துருவேனோனு. யாரப் பார்த்தாலும் அவ ஞாபகமா இருக்குடா. நெஞ்சு படபடனு அடிச்சுட்டே இருக்கு. டேய் உனக்கே தெரியும், நாங்க போகாத இடமே கிடையாது.. இனிமே அந்த இடத்துக்கெல்லாம் நான் எப்படிடா தனியா போவேன். அவ நினைப்பு சாகடிக்குமேடா. அவ போன மாசம் எனக்குக் கொடுத்த முத்தம் கூட இன்னும் காயலடா. "

"அடக் கருமமே! முத்தம் வேற கொடுத்தாளா உனக்கு? அட விடு மாப்ள. இன்னிக்கு அவனுக்கு கொடுத்திட்டிருப்பா!! இதெல்லாம் கொடுத்து வாங்குறதுதானப்பா!!! இதுக்குப் போயி பெருசா அலட்டிக்காதடா!ஹி ஹி!"

"அதான்டா என்னால தாங்கவே முடில. நேத்து வரைக்கும் என்கூட கொஞ்சிட்டு, கட்டில் விஷயம் வரைக்கும் அன்னியோன்யமா பேசிட்டு, இன்னிக்கு...... சீ... நினைச்சாலே அருவெறுப்பா இருக்குடா... செத்துருவேண்டா நான். என்னால முடிலடா.. ஆனா உனக்கு என் சீரியஸ்னெஸ் புரியலேல. எதோ எப்பயும் போல பேசுறேன்னு நினைச்சிட்டு கிண்டல் பண்றேல. இப்போ புரியாதுடா உனக்கு. நாளைக்கு புரியும்.. நான் வைக்கிறேன்..."

"டேய் டேய் வச்சிறாத.. உன்ன சிரிக்க வைக்கலாம்னு நினைச்சு சொன்னேன்டா.. மன்னிச்சுக்க. தப்பான முடிவு எதுவும் எடுத்துறாத மாப்ள. என்னனாலும் பார்த்துக்கலாம். உனக்கு இதை விட சூப்பர் ஃபிகரு கிடைக்கும்டா..
இப்போ என்னடா. அவள தூக்கலாமானு நேத்தே கேட்டேன். நம்ம பசங்க ரெடியா இருந்தாய்ங்க. நீதான், அவ விருப்பத்தோடதான் கல்யாணம் நடக்குது, தூக்குனா பிரச்சினை ஆயிரும் அதுனால வேணாம்னு சொன்ன. இன்னிக்கு ஃபோன் பண்ணி, செத்துருவேன் வச்சிருவேன்னு புலம்புற. என்னதான்டா பண்ண சொல்ற?"
........
"டேய்.. சிக்கன் வாங்கிட்டு வந்தேன். பூடு வாங்க மறந்துட்டேன்பா.. கண்ணு போய் வாங்கிட்டு வந்துருடா.. நைட்டு கோழிக்குழம்பும் சாப்பாடும் பண்றேன்."

"நீ வேறம்மா... இப்ப சிக்கன் தான் ரொம்ப முக்கியம். எப்பப் பார்த்தாலும் ஃபோன் பேசுறப்ப உயிர எடுக்காதம்மா... இரு வர்றேன்.. மாப்ள, நான் கடைக்கு போறேன். வந்து பேசுறேன்."
........

"சாப்புட வா.. மணி பத்தாச்சு."

"எனக்கு வேணாம்மா.."

"வாப்பா, உனக்காகத்தான் சிக்கனே வாங்குனேன். ஒழுங்கா வந்து சாப்புடு."

"இந்த வர்றேன் இரு.."
........
"எப்படிம்மா சூப்பரா பண்ற. நீ செஞ்சா மட்டும்தாம்மா வாசம் பயங்கரமா வருது. எவ்ளோ சாப்புறேன்னு எனக்கேத் தெரில. அப்பா எங்கம்மா?"

"அத விடு. நீயென்டா இன்னிக்கு என்னமோ போல இருக்க? எதாச்சும் பிரச்சினையா? ரகு கூட சண்ட போட்டியா எப்பவும் போல? என்ன பிரச்சினைனு என்கிட்ட சொல்லு இப்படி இருக்காத கண்ணு. அம்மா இருக்கேன்ல..."

"அதுக்காகத்தான் நீயா போயி சிக்கன் வாங்கிட்டு வந்து சமைச்சியா? பிரச்சினையெல்லாம் ஒன்னுமில்லம்மா.. நல்லாத்தான் இருக்கேன். நான் டைரி எழுதிட்டு போய் தூங்கப்போறேம்மா."

"ஹ்ம்ம்"
........

அம்மா செஞ்ச சிக்கன் சூப்பரா இருந்துச்சு. வேற ஒன்னும் எழுதுற அளவுக்கு பெருசா நடக்கல. அவ்ளோதான்.
........

Tuesday, July 21, 2009

சன் நெட்வொர்க்கும் கொடூர மாறன்களும்

தலைப்பு ஏதோ ஆலிவுட் டப்பிங் படம் மாதிரி இருக்குனு நினைக்காதீங்க. முழுசா படிச்சீங்கன்னா புரியும்!
அதுக்கு முன்னாடி,

"1) பா.ம.க வும், ம.தி.மு.கவும் அடிக்கடி கூட்டணி மாறாத கட்சிகள்.
2) தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக கம்யூனிஸ்ட் ஆட்சிதான்.
3) பேரரசு படங்கள் சமூகப்பொறுப்புணர்வுடன் கூடிய ஜனரஞ்சகமான படங்கள்."

இப்படியெல்லாம் நான் சொன்னா, என்ன "கேனைப்பயல், கோமாளி"னு திட்டுவீங்களா மாட்டீங்களா?
ஆனா,

"1) தெனாவெட்டு சூப்பர் ஹிட்டு
2) திண்டுக்கல் சாரதி செம படம்
3) அயன் படத்தை மக்கள் அயராமல் பார்க்கின்றனர்
4) சன் டி.டி.எச் சிறந்த டி.டி.எச்
5)படிக்காதவன்..........
6)மாசிலாமணி........."
7)கோவை பிரதர்ஸ் 2008ன் சிறந்த படங்களில் ஒன்று.

இப்படிலாம் சொன்னா மட்டும் எப்படி மக்களே சும்மா இருக்கீங்க? கூச்சமே படாம, ஓடாத படத்த செம ஹிட்டுனு நம்மகிட்டயே சொல்றாய்ங்க. கேட்கவே முடியாத பாட்டுக்கு நம்பர் ஒன் இடம் கொடுத்து டாப் டென்ல போடுறாய்ங்க.

சன் மியூசினு ஒரு சேனல் இருக்கு. ஆத்தி...!! கொடுமடா சாமி. அதுல வர்ற பொண்ணுங்க, பையனுங்க, சில நேரத்துல எங்க அப்பத்தா "அது பொண்ணா பையனாப்பா?"னு என்ட கேட்கும். ஆனா அது கூட காமெடி இல்ல. அதுக்கு பதில் சொல்றதுக்காக சட்டுனு திரும்பி டிவியப் பார்த்தா நம்மலால உடனே பதில் சொல்ல முடியாது. அவ்ளோ கர்ணகொடூரமா ட்ரெஸ் போட்டிருப்பாய்ங்க.
இப்படித்தான் ஒருநாளு எங்கப்பத்தா சன் மியூசிக் பார்த்துட்டு இருந்தப்ப திடீர்னு "அடப்பாவமே.. இந்தப் பொண்ணு நேத்து நல்லா இருந்துச்சு. இன்னிக்கு கையில மாவுக்கட்டுப் போட்டிருக்கு."னு கொஞ்சம் அதிர்ச்சியா சோகமா சொன்னுச்சு. என்னடானு பார்த்தா எனக்கு அடுத்தடுத்து ரெண்டு அதிர்ச்சி. முதல் அதிர்ச்சி, அந்தப் பொண்ணு போட்டிருந்தது மாவுக்கட்டு இல்ல, ஸ்டைலுக்காக போடுற ஃபேஷன் பேண்டு, அதாவது மணிக்கட்டுல இருந்து முட்டி வரைக்கும் மறைச்சு அப்புறம் ஓபனா விட்டு டி.ஷர்ட்னால மூடுறது. அடுத்த அதிர்ச்சி அந்தத் தொகுப்பாளர், பொண்ணு இல்ல, பையன்!!!!

சன் மியூசிக்ல ஒரு பொண்ணும் பையனும் வந்து பேசுனா கூட பல்லக் கடிச்சுட்டு பாட்டுக்காக வெயிட் பண்ணி பார்த்துரலாம். ஆனா ரெண்டு பையனுங்க வந்து பேசுனாய்ங்கன்னா, கொமட்டிட்டு வரும். சும்மா அறு அறு அறு அறுனு அறுத்தெடுப்பாய்ங்க. எதையாவது மொக்கத்தனமா சொல்லிட்டு அவிய்ங்களே சிரிச்சுக்குவாய்ங்க. இத அவங்க வீட்டு ஆளுகெல்லாம் பார்ப்பாங்களா மாட்டாங்களானு தெரில!! சன் மியூசிக்க எங்க அப்பத்தா பார்த்ததே பாட்டு போடுவாய்ங்கனுதான். ஆனா இப்பல்லாம் போட்டா அயன் பாட்டு, படிக்காதவன் பாட்டு, மாசிலாமணி பாட்டு தான். திருப்பி, திருப்பி அதான், அதேதான். சன் நெட்வொர்க்குக்கு புடிக்காத தயாரிப்பாளர்களான ஐய்ங்கரன், தாணு படங்களில் இருந்து பாடல்களே கிடையாது. முக்கியமாக அஜித் பாடல்கள் அமாவாசைக்கு ஒருமுறை வரும். சரி உன் சேனல். நீ என்ன வேணா போட்டுக்க!!

சன் டிவி, கேட்கவே வேணாம். அடக் கண்றாவியே, ஈழத்துல என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்க எட்டு மணிக்கு நியூஸ் போட்டா அதுல 'மாசிலாமணி திரைப்படம் தமிழகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. மக்கள் சும்மா சும்மா எழுந்து ஆடுகின்றனர். பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது'னு சொல்றான்பா கூச்சமே படமா!! இதான் நியூஸா???
அப்புறம் சித்தி, அவ மக அண்ணாமலை, அவ மக செல்வி, அவங்கம்மா அரசினு ஒரு வரலாற்று காவியம் நிக்காம ஓடுது! தேவயாணிக்கு ரெண்டு புள்ள பொறந்தும் கோலங்கள் முடியல!! விஜய் டிவி லொள்ளு சபால கலக்கிட்டு இருந்து மனோகரை கூட்டி வந்து டாப் டென்ல மொக்கையாக்கிட்டாய்ங்க!! இதெல்லாம் கூட நமக்கு பிரச்சினை இல்ல. இப்போ கொஞ்சம் சீரியசா பிரச்சினையை பார்ப்போம்!!!

'திராவிட இயக்க வரலாறு' எழுதிய முரசொலி மாறனின் இளைய மாறன்கள், தங்கள் தொலைக்காட்சியில் இராமயணமும், மகாபாரதமும், ஜோதிடமும் ஒளிபரப்பிய போதே, இவர்கள் தொழிலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் இதெல்லாம் என் பிரச்சினை அல்ல. இவைகளைப் பார்ப்பது பிடிக்கவில்லையென்றால் ரிமோட்டை எடுத்து சுலபமாக என்னால் சேனல் மாற்றி 'பயனுள்ள நிகழ்ச்சிகள்(!!)' பலவற்றை பார்க்க முடியும்!
ஆனால் என்னிடம், பிச்சைக்காரன் நோட்டீஸ் காட்டுவதைப் போல, தினமும் ஆயிரம் விளம்பரம் காட்டி, 2000ரூபாய் பிச்சையெடுத்து, சன் DTHஐ என் வீட்டில் மாட்டிய இந்த மாறன்களின் அயோக்கியத் தனத்தையும், சர்வாதிகாரத்தையும் சமீபத்தில் அறிந்தேன். சன் மியூசிக் என்ற மகாகேவலனமான சேனலை பாடல்களுக்காகக் கூட காண சகியாது, இசையருவியை பார்ப்போமே எனப் பார்த்த போது, இலவசச் சேனலான அது SUN DTH சேவையில் இல்லை. வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்தால் (அது இலவசம் இல்லை. TOLL FREE number எப்பொழுதுமே கிடைக்காது) பல நிமிட காத்திருப்புக்குப் பின் பேசிய அதிகாரியின் பதில் "இசையருவி இப்போதைக்கு கொடுப்பதாய் 'ஐடியா' இல்லை" என்பது!!! இதே நிலைதான் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிக்கும்.
சன் DTHக்கு நாம் காசு கொடுக்கிறோம். Star movies, HBO போன்ற Pay channelகளுக்கு தனியாக கட்டுகிறோம். ஆனால் மாதத்திற்கு 75ரூபாயிலான Basic Packயில் தெரிய வேண்டிய இசையருவியையும், ஜெயா மேக்ஸும் ஏன் தெரியவில்லை? நாம் இதைத்தான் பார்க்கவேண்டும் என முடிவு செய்ய இவர்கள் யார்? 500 ரூபாய்க்கு DTH என்ற விளம்பரத்தைப் பார்த்து என் நண்பன் வீட்டில் அதை மாட்டினான். ஆனால் வினியோகஸ்தர்கள் அவனிடம் வாங்கியதோ 1850ரூபாய். விவரம் Installation charge 100ரூபாய், SUN DTH charge 1750 ரூபாய். வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டால் ஒழுங்கான பதில் இல்லை. Installation chargeஆகத்தான் அந்த 1350 ரூபாயும் வாங்கியிருப்பார்கள் என பதில் அளித்தார்கள். பின் ஏன் 500ரூபாய் என விளம்பரம் செய்ய வேண்டும்?

"அய்யோ அழகிரி சன்DTHஐ அழிக்கிறார், அவரின் ஆதரவாளர்கள் உடைக்கிறார்கள்" என தெருத் தெருவாய் ஒப்பாரி வைக்கத் தெரிந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் இது தெரியவில்லையா? இப்படி மக்களை ஏமாற்றியும், "நான் அளிக்கும் சேனலைத்தான் நீ பார்க்க வேண்டு"மென சர்வாதிகாரம் செய்பவர்களையும் மக்களே செருப்பால் அடிப்பார்களெனத் தெரியாதா இவர்களுக்கு? தொழிலுக்காக அப்பாவை அசிங்கப்படுத்தினார்கள், இப்போது மக்களை ஏமாற்றும் இவர்களை என்ன சொல்வது?
தொழிலுக்காக எதையும் செய்யும் இந்த வியாபார காந்தங்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் ஜெயலலிதா சுமத்தும் அனைத்துக் குற்றங்களையும் ஏன் செய்திருக்க மாட்டார்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

மேலும் கலைஞர் டிவி, மற்றும் ஜெயா டிவி அதிகாரிகள் SUN DTHன் இசையருவி, ஜெயா மேக்ஸ் இருட்டடிப்பை உடனே கண்டுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.

இந்த ஆகஸ்டு மாதத்துடன் SUN DTHக்கான என் சந்தா முடிவடைகிறது. தொலைகிறது சன்(னி)யன் என என் வீட்டிலுள்ள DTHஐ மாற்றலாம் என முடிவு செய்துள்ளேன். இப்போது சன்DTH உபயோகிப்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பதும் இதைத்தான். தயவு செய்து சந்தா முடிந்தவுடன் மாற்றிவிடுங்கள். என்ன DTH சேவை உபயோகிக்கலாம் என யோசிப்பவர்களிடம் நான் சொல்வதெல்லாம், தமிழ் நாட்டுக்காரனின் DTH சேவை சன் தான் என சன்DTH போடாதீர்கள், வேறு எது வேண்டுமானாலும் போடுங்கள். தமிழ்நாட்டில் உள்ளது என்பதற்காக சாக்கடையில் விழ முடியுமா? விழுந்த வருத்தத்தில் சொல்கிறேன். சீக்கிரமே சன் நெட்வொர்க் தனது அபரிமிதமான வளர்ச்சி ஒரு புற்றுநோய் கட்டிதானேயொழிய நியாயமான, சரியான வளர்ச்சியல்ல என்பதை உணரும். மக்கள் உணர்த்துவர். சன் நெட்வொர்க்கின் அனைத்து சேவைகளையும் முடிந்தவரை புறக்கணியுங்கள். நன்றி.

Sunday, July 19, 2009

கடுகு பொறுக்கி


எத்தனையோ வாட்டி நான் என்னென்னவோ நினைச்சிருக்கேன். சின்ன வயசுல சூடு வச்ச அத்தையோட மகள கட்டக்கூடாதுன்றதுல ஆரம்பிச்சு, சங்கு மார்க் கைலியத் தவிர வேற எந்த மார்க் கைலியும் கட்டக்கூடாதுன்ற வரைக்கும். ஆனா அடிபட்டு, மிதிபட்டு, அல்லல்பட்டு செத்தாலும், அவிட்டம் நட்சத்திரத்துல மட்டும் சாகக் கூடாதுடா சடகோபானு நான் நினைச்சது, என் மாமா சுப்பிரமணி செத்து தூக்கிட்டுப் போனப்பதான். அப்போ நான் சென்னைல இருந்தேன், அதாவது மாமாவ தூக்கிட்டுப் போனப்ப இல்ல, மாமா செத்துப்போச்சுதுன்னு எனக்கு சேதி வந்தப்ப. சென்னைக்குன்னு அருமையான குணம் ஒன்னு உண்டு. எவன் சேர்ந்து இருந்தாலும் அதுக்கு புடிக்காது. அப்பன்-மவன், ஆத்தா-மவன், அண்ணன்-தம்பி, இதுக்கெல்லாம் மேல புருசன் பொண்டாட்டி சேர்ந்து இருந்தா இந்த சென்னை சனியனுக்கு புடிக்கவே புடிக்காது. நான் வாங்குற 8000 ரூவா சம்பளத்துல என்னால மட்டும் தான் சென்னைல இருக்க முடிஞ்சுச்சு. என் பொண்டாட்டி அழகுமணியும் என் புள்ள சுப்பிரமணியும் மதுரைலதான் இருக்குதுங்க. நான் மாசத்துக்கு ஒருவாட்டி வந்து பார்த்துட்டு போவேன். போனாவாட்டி வந்தப்ப மாமா நல்லாத்தான் இருந்துச்சு, பேசுச்சு, "டேய் சட பொண்டாட்டி புள்ளைய விட்டுப்போட்டு ஏண்டா அந்த சுடுகாட்டுல (மாமா எப்பயுமே சென்னைய சுடுகாடுனு தான் சொல்லும். எப்பயோ யாருகிட்டயோ, சென்னைல அப்படி என்னதான் இருக்குனு கேட்ருக்கு. அதுக்கு அவன் "என்ன இப்படிக்கேட்டுப் புட்டீங்கப்பு? அண்ணா சமாதி, எம்.ஜி.ஆரு சமாதி எல்லாம் இருக்குல்ல"னு சொல்லிருப்பான் போல்ருக்கு! அதுலேர்ந்து எங்க மாமாக்கு சென்னை சுடுகாடு தான்) இருந்து அல்லாடுற? பேசாம இங்க வந்துரு நம்ம மில்ல பார்த்துக்கடா"னு சொன்னுச்சு. என்னதான் நம்ம மாமான்னாலும் சொந்தபந்தத்துக்குள்ள வேலை பாக்குறது சரிவராதுனு நினைச்சு, நான் கடைசி வரைக்கும் ஒத்துக்கல. மாமாக்கு அதுல வருத்தம்தான். இப்போ என்னமோ இதய செயலிழப்புனு சொல்றாய்ங்க. மாமா செத்துப்போச்சுனு என்னால நம்பவே முடில. சுப்ரமணிக்கு, மாமா தாத்தான்னா அவ்ளோ புடிக்கும். அவனுக்கு தாத்தானா அவருதான். ஒரு பென்சில் பாக்சுனா கூட அவனுக்கு மாமாதான் வாங்கித்தரும். செத்த வீட்டுல அவன தேத்துறதே பெரிய விஷயமா இருக்கும் அழகுக்கு.

கூட்டம் பயங்கரக் கூட்டம். ரோஜா வாசம் குடலைப் பொறட்டுது. என்னதான் ரோஜாவ காதல் சின்னம்னு சொன்னாலும் எனக்கு அந்த வாசம் பட்டாலே சாவு வீடுதான் நினைவுக்கு வரும். பிஞ்சு பிஞ்சு வாசல் பூராவும் கிடக்குற ரோஜானாலே எனக்கு ஒப்பாது. எத்தனையோ தடவ நானும் மாமாவும் கேதத்துக்கு ரோஜா மாலை வாங்கிட்டுப் போயிருக்கோம். இன்னிக்கு அழகு என்ன வர்றப்ப மாலை வாங்கிட்டு வரச்சொன்னப்ப முடியாதுனுட்டேன். மாமாவப் போயி ஒரு பிணமா பாவிக்கவே எனக்கு மனசு வரல.

சுப்பிரமணி ஒன்னும் அழுத மாதிரி தெரியல. அழகு கண்ணெல்லாம் வீங்கிப் போயி இருந்துச்சு. எல்லாப் பொம்பளைங்களும் என்னப் பார்த்தவுடன கத்திக் கூச்சல் போட்டுச்சுங்க. வழக்கமான எல்லாம் முடிஞ்சோனே வெளிய பந்தலுக்கு கீழ நானும் என் மடியில சுப்பிரமணியும் உக்காந்தோம். அப்போ "நேரமாச்சுல்ல தூக்கிருவோமா?"னு ஒருத்தன் கத்துனான். அவன இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. சில சொந்தக்காரய்ங்க இருக்பாய்ங்க, சாவு வீட்டுக்கு மட்டும்தான் வருவாய்ங்க. அப்புறம் காணாம போயிட்டு அடுத்த சாவுக்குதான் வருவாய்ங்க. இவன் அப்படிப்பட்டவன் போல. எடுத்துருவோம்னு முடிவு பண்ணி சடங்கெல்லாம் ஆரம்பிச்சுட்டாய்ங்க.

"டேய் சம்முகம், அவிட்டம்ல செத்துருக்கான்டா உன் சித்தப்பன். சடங்கெல்லாம் சரியாப் பண்ணனும். எதுனாலும் என்கிட்ட கேட்டுப் பண்ணுங்கடா, அப்புறம் லோல்படாதீங்க. வாசவழியா தூக்கக்கூடாது, சன்னல் இல்லேனா செவுத்துல ஓட்டப்போட்டுத்தாண்டா தூக்கனும்" னு ஒரு கிழவி கூச்சல்போட்டுச்சு. "அதுக்குத்தான ஏற்பாடு பண்ணுது, கத்தாத ஆத்தா"னு சம்முகம் சொன்னான். வழக்கமா மாமா வீட்டுல கொசுறு வேலை பாக்குற முருகேசன் வந்து ஓட்டப் போட்டான் செவுத்துல. "ஓலப்பாயி கொண்டாந்தியா? அதுலச் சுத்திட்டு அப்புறம் ஒரு சாவலை அடிச்சு ரத்த பலி கொடுக்கனும். பிறவு ஓட்ட வழியா ஓலப்பாய வெளிய கொண்டாந்து, உடனே ஓட்டைய அடைச்சுப் புடனும்டா. பிறவு பாடேல ஏத்துற வரை யாரும் பாக்கக் கூடாது. முதல்ல இதச் செய்யிங்கடா மத்தத பிறவுச் சொல்லுறேன். டேய் முருகேசா போயி ஒரு கிலோ கடுகு வாங்கியாடா"னு காபியக் குடிச்சுக்கிட்டே சொல்லிட்டு உள்ளப் போயிருச்சு கிழவி. எனக்கு ஒன்னும் புரியல.

சோமு மாமா அப்பத்தான் பக்கத்துல வந்து உக்காந்தாரு. துக்கம் விசாரிப்புக்குப் பிறவு பொதுவா பேசிகிட்டிருக்கப்ப கேட்டேன், "மாமா எதுக்கு ஓலப்பாயி, செவுத்துல ஓட்டைனு என்னென்னெமோ செய்றாங்க. பாவம் மாமா. அவரு வீட்டுலயே இப்படில்லாம் பண்ணலமா?" "அட என்னப்பா நீயி? ரொம்ப பாசக்காரய்ங்கதான் அவிட்டத்துல சாவாய்ங்க. உன் மாமனப் பத்திக் கேட்கவே வேணாம். அவிட்டத்துல செத்தவுக ஆவி வீட்ட விட்டு அவ்ளோ சுளுவா போவாதுப்பா. அதுக்குத்தான் இதெல்லாம். ஓலப்பாயில சுத்தி செவுத்து வழியா தூக்குனா ஆவி குழம்பிரும். அதுக்கு எது வாசல்னு தெரியாது."ன்னாரு. சுப்புவும் கேட்டுகிட்டே இருந்தான். ஓலப்பாயில சுத்தி எடுத்துட்டு வந்து பாடேல ஏத்திட்டாக. திடீர்னு கடுகு பாக்கெட்ட எடுத்துட்டு ஓடியாந்துச்சு கிழவி, "சம்முகம் இதக் கையில வச்சுக்க. சுடுகாடு வர ரோட்டுல போட்டுக்கிட்டே போனும்டா. போறவர தீராம பார்த்துக்க."னு சொல்லிட்டு கைல கொடுத்துட்டு பாடைய பார்த்து அழுவ ஆரம்பிச்சுருச்சு.

மாமாவ தூக்கிட்டு சுடுகாடு போக ஆரம்பிச்சாய்ங்க, நான், சுப்பிரமணி, சோமு மாமா பின்னாடியே நடந்தோம். என் மூஞ்சில குழப்பத்த பார்த்துட்டு அவரா பேச ஆரம்பிச்சாரு, "சுடுகாட்டுல எரிச்சவுடனே ஆவி வீட்டுக்கு வரப்பாக்கும் டா. கடுகப் போட்டுகிட்டே போனோம்னா அதப் பொறுக்கிகிட்டே அது வீடு வந்து சேர்றதுக்குள்ள விடிஞ்சி போகும். அதால ஆவி திரும்பிப் போயிரும்னு ஒரு நம்பிக்கை"னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சாரு.

சுப்பிரமணி என் கைய சுரண்டி தூக்கச் சொன்னான்.
"அப்பா. மாமா தாத்தா இனிமே வரவே மாட்டாராப்பா?"
"ஆமாடா. செத்துப்போயிட்டாருல. இனிமே சாமிடா அவரு" "ஆவியா கூட வரமாட்டாராப்பா?"
"வரமாட்டாருடா. அதுக்குத்தான் கடுகெல்லாம் போட்டுட்டே போறாங்க"
"ஏம்பா? மாமா தாத்தா செத்துட்டாருனு எல்லாரும் அழுதாங்கல்ல. அவரு ஆவியா வந்தா நல்லதுதானப்பா. நம்மகூடவே இருப்பாருல்ல. ஏம்பா விட மாட்றாங்க?"

Wednesday, July 15, 2009

கவுதம் லூசுதேவ மேனன்.

இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...!!

சமீப காலமாக நம்மூர் மக்கள் கவுதம்மேனனை தலையில் தூக்கிவைத்து ஆடுவதில் மும்முரமாக உள்ளதைக் கண்டதின் பலனாகவே இதை எழுதுகிறேன். இவரின் முதல் சில சினிமாக்களில் இவர் பெயர் வெறும் 'கவுதம்'. பின் 'கவுதம் மேனன்'. பின் 'கவுதம் வாசுதேவ மேனன்'. பின்வரும் நாட்களில் கவுதம் 'லூசு'தேவ மேனனாகக் கூட மாறலாம்.

ஆங்கிலப் படங்களை திருட்டு விசிடியில் பார்த்து படம் எடுப்பதை வரவேற்பவன் நான். ஏனென்றால் இங்கிருக்கும் பல இயக்குனர்கள் சொந்தமாக சிந்தித்து படமெடுத்தால் நம் கதி அவ்வளவுதான். ஆனால் கவுதம் என்ற அறிவுஜீவி, தான் காப்பி அடித்ததை ஒத்துக்கொள்ள மறுப்பதோடல்லாமல், காப்பியடிக்கப்பட்ட கதை தன் வாழ்வில் தனக்கு நடந்த சம்பவம் என கொஞ்சமும் கூச்சப்படாமல் சொல்லும் ஒரு வெட்கங்கெட்ட கேரக்டர். அது எப்படியோ தெரியவில்லை, கவுதம் வாழ்க்கைல நடந்த கதையை அமெரிக்காகாரன் 'Forrest Gump'னு TomHanksச வச்சு படமா எடுத்துட்டான். (என்னால கவுதமை பற்றி எழுத்துத் தமிழ்ல இதுக்கு மேல எழுத முடில. அதுனால பேச்சுத்தமிழ்லயே எழுதிறேன்.!!)

முதல்ல 'வானரம்' ஆயிரம் படத்த பாப்போம். ஒரு அருமையான அமெரிக்க படத்தை காப்பி அடிச்சதையாவது ஒழுங்கா அடிச்சுச்சா இந்த அதிகப்பிரசங்கி? முதல் காட்சில புருசன் சூர்யா ரத்தம் ரத்தமா கக்குறத பார்த்து பொண்டாட்டி சிம்ரன் சாவகாசமா "ஹேய் வாட் ஹேப்பண்ட் (Hey, what happened?)"னு ரொம்ப ஜாலியா, கூலா ஒரு வசனம் பேசுச்சு பாருங்க, எனக்கு ரத்தவாந்தியே வந்துருச்சு. அடுத்த சீன்ல அடுத்த அட்டாக் என்னன்னா, அப்பன் சாகுறத பார்த்து மகள் ரசிச்சுட்டே சொல்லுவா "(mom.See.He is smiling!!)மாம். சீ.. ஹி இச் ஸ்மைலிங்"னு!!! அடங்கொன்னியா!! என்னால முடிலடா சாமி!!
ஸ்கூல் ஃபீசு கட்ட வக்கில்லாம தங்கச்சிகிட்ட கடன் வாங்குன அப்பன், பையன அமெரிக்கா அனுப்புவாராம். பையன் அங்கபோயி ஜாலியா கும்மாளம் போடுவாராம்!! அப்பன், பையனோட நண்பர்கள் முன்னாடி பொண்டாட்டி மேல சாஞ்சுகிட்டே தண்ணியடிப்பாராம், அதுவும் 1980கள்ல. இப்ப அப்படி பண்ணாலே எந்தப் பையனும் செருப்பால அடிப்பான். ஆனா படத்துல பையனும் பொண்டாட்டியும், அப்பன் தண்ணியடிக்கிறத கும்பலா ரசிக்கிறாங்கப்பா.

எல்லாத்தையும் விட காமெடி, "மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப்ப சிம்ரன் ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அய்யோ அம்மா... செத்துப்போன எங்கப்பத்தா கூட அழகா சிரிக்கும்டா சாமி. படம் இப்ப முடிஞ்சிரும் அப்ப முடிஞ்சிரும்னு பார்த்தா கிழவன் சூர்யா நடந்துகிட்டே அட்வைச போடுறான், பையன் ஆடிகிட்டே அருவைய போட்றான். "ஐ தின்க் ஐ ஃபெல் இன் லவ் வித் யூ (i think i fell in love with you)"னு படத்துல அத்தனை பேரும் பத்து தடவ சொல்றாய்ங்க. எனக்கு பைத்தியமே புடிச்சு போச்சு. ஆங்கில படத்த காப்பியடிச்ச சரி, அதுக்காக வசனத்தையுமா ராசா காப்பியடிக்கிறது??!!!

இன்னொன்னு..
கவுதம் படத்துல எல்லாருமே நீளமா முடி வளர்த்துகிட்டு கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க. எல்லாமே ஆங்கிலப் படத்துல வர்ற "Fuck, Cunt, Son of a bitch, etc" போன்ற மிகக் கேவலமான வார்த்தைகள். இந்த லூசுதேவ மேனன் அதைக் கூட விடுறதில்ல. எல்லா வார்த்தையையும் அப்படியே தமிழ்ல டப்பிங் பண்ணி வசனம் எழுதிரும். நமக்கு தியேட்டர்ல பாக்குறப்ப "****தா வாடா" "பெரிய போலீஸ் ******டையாடா நீ", "உன் பொம்பளை****** தூக்கிட்டேன்டா"னு முக்கால்வாசி சென்சார் பண்ணித்தான் கேக்கும்! ஆனா ஈயடிச்சான் காப்பில கவுதமை மிஞ்ச முடியாது. பெரிய ஜார்ஜ் புஷு பேரன்னு நினைப்பு, காதலை சொல்றதை கூட "நான் உன்ன விரும்புறேன்"னு இவரு படத்துல சொல்ல மாட்டாய்ங்க. "ஐ ஃபெல் இன் லவ் வித் யூ"னு எஸ்.எம்.எஸ் அனுப்புற மாதிரிதான் பேசுவாய்ங்க. அப்பத்தான் படம் உலகசினிமா அளவுல இருக்குமாம். இப்படி போயி ஒரு பொண்ணுகிட்ட காதலை சொன்னா, லவ் லெட்டர் இல்ல, நம்மல மென்டல்னு நினைச்சு நம்ம மேல ஒரு ஈவ்டீசிங் கேசு கூட கொடுக்காது.

வேட்டையாடு விளையாடு படம் அப்படியே RED DRAGON மற்றும் இன்னும் சில சீரியல் கில்லர் படங்களின் காப்பி. அதுல வில்லன்களை ஓரினசேர்க்கையாளர்களாகவும், பெண்களை வல்லுறவு கொள்ளும் வெறியர்களாகவும் காமிச்சிருப்பாரு இந்த அரைவேக்காட்டு இயக்குனர்!! எங்க போயி சொல்றது. அந்தப் படத்துல நடிச்சதுக்கு கமலே வருத்தப்பட்டது வேற விஷயம். பச்சைக்கிளி முத்துச்சரம் 'Derailed' என்ற படத்தின் அச்சு அசல் காப்பி.

சமீபத்துல ஒரு இணையதள நேர்காணல்ல இந்த லூசுதேவ மேனன் ஒரு செம காமெடி பண்ணாரு. நிருபர், இயக்குனர் மிஸ்கின் பத்தி கேட்டதுக்கு, கருத்து சொல்ல மாட்டாராம் இவரு. ஏன்னா மிஸ்கின் இரண்டு படம் தான் இயக்கியிருக்காராம். ஆனா சுப்பிரமணியபுரம் நல்ல படம், சசிகுமார் நல்ல டைரக்டர்னு மட்டும் அதே நேர்காணல்ல சொல்லுவாராம். சசிகுமார் மட்டும் என்ன மூணு படமா இயக்கிருக்காரு!!
http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html

சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.

நண்பர்களே நிறைய படங்களை பாருங்க. எது நல்ல படம், யார் நல்ல இயக்குனர் என்பதை முதலில் உங்கள் மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஊரில் நிறைய பேர் சொல்கிறார்கள் என நீங்களும் குமபலோடு கோவிந்தா போடுவதால்தான் கவுதம் வாசுதேவ மேனன் போன்ற ஆட்கள் நிறைய முளைக்கிறார்கள்.

ஆனா எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னா அடுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ல கவுதமோட சோடி போட்டுருக்குறது 'ஆம்பிளை ஷகீலா' சிம்பு. அதுவும் போக, எப்பவும் இணையத்துல நல்ல ஆங்கில பாடல்களை தேடி, சுட்டு, மெட்டு போடும் ஆரீஸ் ஜெயராஜும் இந்தப்படத்துல கிடையாது. சிம்புவும்-கவுதமும் மட்டும் சேர்ந்துருக்காங்கப்பா.. ஹி ஹி!!! ஐயாம் வெரி ஹாப்பி. ஐயாம் வெரி ஹாப்பி!!! :-)

Monday, July 6, 2009

தாத்தன்தாத்தன் நீ செத்த அடுத்த மாசம்
நான் வந்து பொறந்ததால
உம்பேர வச்சாய்ங்கனு
நேத்துவர நினைச்சிருந்தேன்..

உன் மேல கடுப்பெல்லாம்
என்மேல காட்டுவாய்ங்க...
உன் பேர சொல்லித்திட்டி
அப்பப்ப மிதிப்பாய்ங்க...
உன் பேரு எனக்குவச்சக்
காரணத்தத் தெரிஞ்சுகிட்டேன்..

நீ நாடகத்தில் வேசம் கட்டி
வச்சக் கடைய விட்டீனு
ராவுல டாக்கீசு போனா
உம் புள்ள அடிக்கிது..
மானங்கெட்ட உன் பேரன்,
எனக்கெங்க வலிக்குது?

சோறு நல்லா வேகலேனு
உம் பொண்டாட்டிய அடிச்சியாமே?
நீ தின்னதே உம்மாமன் காசு..
என் அப்பத்தாவோ உம் மாமன் பொண்ணு..!!
அப்பப்ப உன் நெனெச்சி
உன் மச்சினைங்க மொறைக்கிறாய்ங்க..!!

எதிர்த்த வீட்டு பெருமாளுட்ட
பத்து ரூவா வாங்குனியே..
குடிக்க வித்த வீட்டுக் காசில்
அதையாச்சும் அடைச்சியா?
எங்கூட விளையாண்டா, அவனே
அவன் பொண்ண மிதிக்கிறான்..!!

கண்ணமூடி எவனத் தொட்டாலும்
நீ கட்டியுருண்டவனா இருக்குறான்..
உம்மேல பகையில
என்ன வெறிச்சுத்தான் முறைக்குறான்..
சும்மா நான் போனாலும்
ஒரண்ட இழுக்க பாக்குறான்..

பொண்ணு கேட்டுப் போனா
உம்பேரச் சொல்லுறாய்ங்க..
"நீ அவன் பேரனா?"னு
பத்தடிக்குப் பம்முறாய்ங்க...

அப்பத்தா அப்ப வந்து,
நான் உன்னமாதிரினு சொல்லி
என் உச்சியில முத்தந்தந்து
அது கண்ணோரம் தொடைச்சிக்கிச்சு..
மொத்த குடும்பம் முறைச்சாலும்
அப்பத்தாவப் பாக்கையில,
தாத்தன் பேரு வச்சதிலே
தப்பொன்ணும் இல்லையினு
என் உள்மனசு சொல்லுச்சு...
என் தாத்தன் உம்பேர
நம்ம ஊருக்குள்ள
கத்தனும் போலிருந்திச்சு....!!!

Saturday, July 4, 2009

வேட்டைக்காரன் விமர்சனம்.

இந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்த அல்ல। உங்கள் விருப்பு வெறுப்புக்களை மறந்து சிரிக்கவே.

வேட்டைக்காரன். எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பெயரில் வெளிவர இருக்கும் தற்கால எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் விஜய் 'நடிப்பில்' வெளிவர இருக்கும் அதிரடி திரைப்படம். படம்தான் இன்னும் வெளிவரவில்லையே, அதற்குள் எப்படி விமர்சனம் வந்துள்ளது என குழம்ப வேண்டாம். படத்தின் இயக்குனர் என் நண்பனின் நண்பர் அல்ல. அதனால் அவரிடம் மட்டும் இந்தப்படத்தை நேற்று திரையிட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர். நானும் அப்படியே ஆர்வமிகுதியில் ஒட்டிக்கொண்டு படத்தை பார்த்துவிட்டேன். என்னுடன் அப்படியே ஒரு இருநூறு பேர் பார்த்தனர். அவர்களுடன் ஒரு இரண்டாயிரம் பேர் பார்த்தனர். இது மக்களுக்கு படத்தின் மீதுள்ள ஆர்வத்தையே காட்டியது.

வழக்கமாய் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு மேக்கப்பிலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் விஜய் இந்தப்படத்தில் தனது இயல்பான முகத்தில் நான்கு நாள் மீசை தாடியுடன் நடித்துள்ளார். 'மதுர' திரைப்படத்தில் கர்சீப்பை காலிலும், 'போக்கிரி'யில் கையிலும் கட்டி கெட்டப் மாற்றி நடித்திருந்த விஜய் இந்தப் படத்தில் கர்சீப்பை தலையில் கட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

கதை என்னவென்றால், விஜய் உழைத்துதான் 'உணவு' உண்ண வேண்டும் என்ற கொள்கை கொண்ட இளைஞர். ஆனால் தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் ஓசியில் 'டீ' மட்டுமே குடித்து வாழ்கிறார். இதுவரையில் விஜய் படங்களில் நாம் பார்த்திராத (கேட்டிராத) அறிமுகப் பாடல் இப்படத்தில் உண்டு. 'டண்டனக்கு டண்டணக்கு' என்பதற்கு பதிலாக 'டண்டானக்கு டண்டாணக்கு' என மிகவும் புதிதாக இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. "நீ அடிச்சா தான் மாஸ்.. நான் கடிச்சாலே மாஸ்" போன்ற பஞ்ச் டயலாக்குகளுடன் தொடங்கிய படம், காமடியன் சத்யனுடன் சில நகைச்சுவைகள், பின் உள்ளூர் தாதாவின் கடையடைப்பை எதிர்த்து அவர்களை துவம்சம் பண்ணுதல், பின் ஊர்காரர்கள் இவருக்கு ஆரத்தி எடுத்தல் என்பது போன்ற படு வித்தியாசமான காட்சிகளுடன் கதை விர்ர்ர்ர்ர்ரென நகர்கிறது. இந்நிலையில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ் ஸ்டாப்பில் அனுஷ்காவை சந்திக்கிறார் விஜய். அனுஷ்காவின் பாவாடை ஓரமாக கிழிந்துள்ளதைக் கண்டு அனுஷ்காவை தெருவில் வைத்தே திட்டி தீர்க்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும், ஓபாமாவின் வீட்டு நாய்க்கு இதனால் எப்படி வயித்துப்போக்கு ஏற்பட்டது எனவும், மிகவும் காட்டமாகவும், தீவிரமாகவும் விளக்குகிறார். தனது வலது கையை மார்பு வரையில் மல்லாக்க உயர்த்தி, "கிழிஞ்சாதான் பாவாட.. கிழியலேனா மானாட மயிலாட" என்று 'அர்த்தத்துடன்' பஞ்ச் டயலாக் பேசுகிறார். அனுஷ்காவை கிழிந்த பாவாடையை தைக்கும் படி திட்டிவிட்டு, பின் தன் வீட்டில் தனது கிழிந்த ட்ரவுசரைப் பார்த்து அழுகும் காட்சியில் விஜய் பின்னியிருக்கிறார். அழுதுகொண்டே ஸ்விட்சர்லாந்தில் ஒரு குத்துப் பாட்டு பாடுகிறார். இதற்கு நடுவில் அனுஷ்கா பாவாடையை மாற்றியவுடன் ஒரு குத்துப் பாடல் வருகிறது. (இந்தப் பாடலில் அனுஷ்காவின் உடைக்கு முதலில் போட்டிருந்த கிழிந்த பாவாடையே பரவாயில்லையென ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்டது) இந்தக்கட்டத்தில் தான் கதையில் யாருமே எதிர்பாராத திருப்பம் வருகிறது, அதாவது அனுஷ்காவுக்கு விஜய் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் விதியோ சதி செய்கிறது!! "யாருமே பார்க்காத அந்த பாவாடை கிழிசலை நீ எப்படி பார்த்த? நீ பார்த்துதொலைச்சது மட்டுமல்லாமல் ஊரையெல்லாம் கூட்டி என் தங்கச்சியோட மானத்தை வாங்கிவிட்டியேடா!!" என கத்திக்கொண்டே அனுஷ்காவின் அண்ணன் திரையில் நுழையும் சமயம் இடைவேளை வந்துவிடுகிறது.

ஓரமாய் பாவாடை கிழிந்ததற்காக ஆத்திரத்தில் கத்திய விஜய், குத்துப்பாடல்களில் பாவாடையே போடாமல் ஆடும் அனுஷ்காவை ஒன்றுமே சொல்லாதது பெண் ரசிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்துப் பாட்டு முடிந்தவுடன் விஜயின் முதுகில் கத்தியால் ஒரு குத்து விழுகிறது. திரும்பிப் பார்த்தால் தன்னுடன் ஒரு காலத்தில் கபடி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுஷ்காவின் அண்ணனும் நிற்கிறார்கள். தாங்கள் குத்தவில்லையென்றும், இயக்குனர் தான் விஜய் செய்யும் அலும்பு தாங்காமல் குத்தச் சொன்னார் எனவும் அவர்கள் எவ்வளோ முறை கெஞ்சியும் விஜய் அவர்களை மன்னிக்காமல் ஊரே அதிரும்படி கர்ஜிக்கிறார். பின் குத்துப்பட்ட காயம் ஆறுவதற்குள் அனுஷ்காவை திருமணம் செய்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார் விஜய். பின்பாதி படத்தில் முதுகில் ரத்தம் சொட்டியபடியே மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். விஜய்யின் வேதனையை பொறுக்க முடியாத நண்பர் சத்யன், விஜய்யின் ரத்தகாயத்தில் 'M-Seal' பூசி அடைக்க வரும் சமயத்தில், விஜய் அவரை தடுத்து, உழைப்பின் உன்னதத்தை பற்றி, நமீதாவுடன் ஒரு ரீமிக்ஸ் பாடல் பாடுகிறார். "ஏன்டா இவன் சம்பந்தமில்லாம பாடுறான்?" என்ற குழப்பத்தில் அழுதுகொண்டே சத்யன் வெளியேரும் போது நம் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. வில்லனின் சதியால்(??!!!) நண்பனை இழந்த ஆத்திரத்தில், தான் செய்த சபதம் கடைசி சீனில் நினைவுக்கு வர, வெறிகொண்ட வேங்கையென எதிரிகளை வேட்டையாடப் புறப்படுகிறார் வேட்டைக்காரன் விஜய்.

வில்லனை வீழ்த்தினாரா? பஞ்சாப் கேப்டன் அனுஷ்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு தலை காதல் என்ன ஆனது? சபதத்தில் விஜய் ஜெயித்தாரா? முதுகில் ரத்தம் நின்றதா? சத்யன் என்ன ஆனார்? ஆடியோ கேசட்டில் இருக்கும் இன்னும் ஒரு குத்துபாடல் எப்போது வரும்? போன்ற பல விஷயங்களுக்கு அழகாக விடை சொல்கிறது இந்த வேட்டைக்காரன்.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விஜயின் வித்தியாசமான படங்களின் வரிசையில், மற்றுமொரு வைரம் தான், இந்த வேட்டைக்காரன். வேட்டைக்காரன் வெல்வான்.
Related Posts Plugin for WordPress, Blogger...