Tuesday, April 14, 2009

தமிழ்ப் புத்தாண்டு!! பிரச்சினைக்கு முடிவு!!


இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள், பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”

(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?

தமிழனுக்கு ‘வருடம்’ ‘பிறப்பதில்லை.’
‘புத்தாண்டு ஆரம்பமாகின்றது.’

அந்தத் தினம் தான் எது?

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

நான் எழுதிய இதன் ஆங்கில மொழிமாற்றத்தை படிக்க இங்கு சொடுக்குங்கள் "Tamil New Year Contravarsy ends here"

நன்றி: www.tamilnation.org.

Sunday, April 12, 2009

சில நேரங்களில் சிந்தித்தது


1)எவரேனும் "நாயே" என திட்டும்போது மட்டுமே
நாம் மனிதன் என உறைக்கிறது நமக்கு!!
சுவற்றில் மூத்திரம் போகும் போது
ஏனோ தெரிவதில்லை...!!

2)மிருகங்களின் பேர் சொல்லி
நாம் நமக்குள் திட்டுக்கொள்வது போல்,
மிருகங்கள் தங்களுக்குள்,
நம் பேர் சொல்லி திட்டிக் கொள்ளுமோ??!!

3)வளர்ந்த பின் நம்மில் எத்தனை பேர்
"பொய் சொல்லக்கூடாது" என திட்டிய அம்மாவிடம்,
"நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்" என,
ஏன் சொன்னாயென கேட்டோம்??

4)அடிபட்டு கீழே விழும் போதெல்லாம்
"நல்லா வேணும்" என எவனும் சந்தோஷப் பட்டிருப்பானோ,
என்றே எண்ணுகிறேன் நான்.
அப்புறம் தான் வலியெல்லாம்..

5)1000ரூபாய் நோட்டுக்குள்
அப்பாவியாய் சிரிக்கும் காந்திக்கு,
"உயிருடன் இருந்தபோது 'இவ்வளவு' மதிப்பு இருந்திருக்குமா?"
என்று லஞ்சம் கொடுத்து
வேலை சாதிக்கையில் யோசித்திருக்கிறேன்.

6)ரோட்டில் எச்சி துப்பிக்கொண்டே,
அவ்வப்போது,
நம் நாட்டின் சுத்தத்தை குறை சொன்னதுண்டு...!

7)நல்லவனுக்கு 'கெட்டவன்'
கெட்டவனாக தெரிவான்..
கெட்டவனுக்கு 'நல்லவன்'
கெட்டவனாக தெரிவான்..
அப்படியெனில்,
ஒருவன் 'நல்லவன்'
ஒருவன் 'கெட்டவன்'
என முடிவு செய்பவன் யார்?

8)பாட்டி சொன்னதெல்லாம் கிடக்கட்டும்
அம்மா என்ன சொல்கிறாள் என்று மட்டுமே அப்பா கேட்கிறார்.
அவர் அப்பாவும் அப்படிதான் இருந்திருப்பார் போல..
நானும் அப்படிதான் இருக்க வேண்டுமோ??

9)பிச்சைக்காரன் 'பிச்சை' எடுப்பதையும்,
நான் 'பிஸ்ஸா' தின்பதையும் நிர்ணயித்தது எது?
இப்படி யோசிக்கப் பிடிக்கவில்லை..
யோசிக்கப் பிடித்தால்
பிஸ்ஸா பிடிக்கவில்லை..!!

10)விபச்சாரியிடம் செல்லும் முன்,
"ஆண் விபச்சாரர்கள் இருந்து
நம் மனைவி அவனிடம் போனால்
எப்படி இருக்கும்?"
என எவனேனும் சிந்தித்து,
போகாமலே வீடு திரும்பியிருப்பானா?

11)தாயோ தந்தையோ,
மகனோ மகளோ,
காதலனோ காதலியோ,
எவராயினும்,
ஒரு மரணத்தை மறக்க
மூணு நாள்..!!

12)வாழும் போது
எப்போது இறக்கப்போகிறோம்
என தெரியாது..
இறந்த பின்னாவது
எப்போது வாழ்ந்தோம்
என தெரியுமா?

13)"அவள் வேறு ஜாதி டா!"
எனக் கூறி
காதல் மணங்களை
எதிர்க்கும் தந்தைகள்,
என்றாவது,
தங்கள் மகனுக்கு
ஏன் ஜாதிப் பற்று
இல்லையென
யோசித்திருப்பார்களா?

காதல் என்றால் தெளிவாய் சொல்வேன் குழப்பம் என்று...


1)உனக்கான என் கவிதைகளில்
உன்னை தேவதைகளுடன் ஒப்பிட்டு,
அவைகளை உயர்த்தி விடுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை!

2)'நான் அழகாயிருக்கிறேன்' என
நம்புவதை விடவும்,
'நீ அழகாயிருக்கிறாய்' என்பதையே
முழுதாய் நம்புகிறது என் இதயம்.

3)காதல் மட்டுமே
உன்னால் கற்றது எனினும்,
எஞ்சியுள்ள வாழ்க்கையை
காதல் கற்றுத்தரும்.

4)இதயம் தொலைந்திருக்குமோ
என தேடும்போதுதான்
உன் காதல் கிடைத்ததெனினும்,
இன்னும் கிடைக்கவில்லை
என் இதயம்.

5)என்னை,
நீ காதலிக்கவேண்டாம்..
முறைத்துக் கொண்டாவதிரு,
எப்படியும் காதலித்து விடுவாய்..!!

6)எனக்கு 'தமிழ்' தவிர
பிற மொழிகள் தெரியாதெனினும்,
"உன்னைக் காதலிக்கிறேன்" என
நீ எம்மொழியில் சொன்னாலும்
எனக்குப் புரியும்.

7)"நான் அழகாயிருப்பதால்
தான் என்னை காதலிக்கிறாயா?"என
நீ கேட்டால்,
"இல்லை. நான் அழகாயில்லாமல்
இருந்திருந்தால் கூட
நீ என்னை காதலித்திருப்பாய்
என தெரிந்ததாலேயே
நான் உன்னைக் காதலிக்கிறேன்"
எனக் கூறுவேன்.

கவிதைக்கு உண்மையும் அழகு..


1)முதலிரவு முடிந்த அடுத்த நாள்
நீ சோம்பல் முறிப்பதை
பார்க்கும் போது,
மீண்டும் முதலில்
இருந்து தொடங்கத்
தோன்றும் எனக்கு.

2)நீ முறித்துபோட்ட
சோம்பல்களை தேடுவதாய் சொல்லி
நான் காற்றில் துளாவும் போது
நீ சிரிப்பதில் இருக்கிறது
நம் அடுத்த சோம்பலுக்கான வித்து..

3)கண்ணாமூச்சி ஆட்டத்தில் என்
கண்களை நீ கட்டிவிடும் போதெல்லாம்
என் கண்கள்,
துணியை தாண்டி உன்னைப் பார்க்கும்
பரிணாம வளர்ச்சியை
பெற்று விடுகின்றன..

4)சேலை கடையில்
உன்னைப் பார்த்து,
"இந்த பொம்மை
கட்டியிருக்கும் சேலை
போல் வேண்டும்"என
கடைக்காரனிடம் கேட்கும்
பெண்களை பார்த்திருக்கிறேன்..

5)காமம் முடிந்தபின்னும்
கட்டிப்பிடிக்க முடியும்
என்பது,
காதலர்கள் மட்டுமே
அறிந்த ரகசியம்..

6)"பூவை பறித்துக்கொடு"
என அழுகும்
பெண்களை பார்த்திருக்கிறேன்..
"பூவை பறிக்காதே"
என அழுகும் பெண்
நீ மட்டுமே..!

7)அழகாய் இருக்கிறாய் என
நீ திமிர் செய்வதில்
வருத்தமில்லை எனக்கு..
என் வருத்தமெல்லாம்,
உன் அழகுக்கு
இந்த திமிர் பத்தாது
என்பதுதான்..!!

8)"ஒரே ஒரு முத்தம் கொடேன்" என
நான் கெஞ்சும் போதெல்லாம்,
நீ சொல்லும் "முடியாது போடா"க்கள்,
உன் முத்தங்களை விட அழகானவை..
அதற்காகவே பலமுறை
நான் முத்தம் கேட்டதுண்டு..!!

9)"ம்ம்ஹ்ம்ம், சீ, போடா" என்ற
வார்த்தைகளை மட்டுமே வைத்து
பல மணிநேரம் அழகாய் பேச
உன்னால் மட்டுமே முடியும்..!

10)"நாயே"என நீ செல்லமாய்
திட்டும் போதெல்லாம்
எங்கோ ஒரு நாய்
வாலையாட்டுவதற்கு பதிலாக
தலையை ஆட்டுகிறது..

11)அவ்வப்போது,
"நீ கணவனாய்
நான் மனைவியா
இருந்திருக்கக் கூடாதா?"
என நான் வருந்தியதுண்டு..
பிள்ளைப் பேறு என்ற பெயரில்
உனக்கு வலியைக் கொடுக்க
விரும்பவில்லை நான்..!

12)"நீ விளையாட்டுக்கு கூட
திட்ட மாட்டாயா?"என
நீ கேட்டபோது
திட்டுவதென்றால் என்ன என்பதே
எனக்கு மறந்துபோயிருந்தது!!

13)என் கவிதைகள்
என்னை விட
உனக்குதான் விசுவாசமாய் உள்ளன..
உன்னை வருத்தப்பட வைத்தால்
தானாக அழிகின்றன..

14)கவிதைக்கு பொய்யழகாமே!!
உன்னைப் பற்றிய கவிதைகளில்
உண்மையை சொல்கிறேனே,
பரவாயில்லையா உனக்கு?

காதல் காத்திருக்கிறது


1)நம் முதலிரவுக்குக் காரணமாய்,
தாலி மட்டுமே இருக்கக்கூடாது
என்பதும்,
நான் உன்னைக் காதலித்ததற்கு
ஓர் காரணம்..

2)திருமணம் முன்பே கூட,
நீ, என்னை முத்தமிட அனுமதித்திருப்பாய்
என்பது எனக்குத் தெரியும்..
அதேபோல்,
நீ முத்தமிட அனுமதித்தாலும்,
நான் முத்தமிடமாட்டேன் என
நீ நம்பியதும் எனக்குத் தெரியும்..
அதனாலேயே நான் முத்தமிடவில்லையென்பது
உனக்குத் தெரியுமா???

3)உன்னைக் காதலிப்பது
உனக்காக மட்டுமல்ல..
உன்னைப் போலவே
ஒரு மகளும் வேண்டும்
என்பதற்காகத்தான்...

4)எதோ ஒரு எண்ணிலிருந்து
நீ 'வெற்று குருந்தகவல்'
அனுப்பினால் கூட,
அனுப்பியது நீதான்
என கண்டுபிடிக்கும் சக்தியை
காதல் தந்திருக்கிறது!!

5)சென்னையில் இருக்கும் நீ
மதுரையில் இருக்கும் என்னிடம்,
சென்னையில் தொலைந்த
உன் கைக்கடிகாரத்தைக்
கண்டுபிடித்துத் தரும்படி அழுதாயே,
இதைவிட யார் காதலை
அழகாய்ச் சொல்ல முடியும்!!??

6)நதியில் குளித்து
தன்னை சுத்தமாக்கிக்
கொள்ளும் பெண்ணில்லை நீ...
நதியில் குளித்து
நதியை சுத்தமாக்கும்
பெண் நீ..!

7)கடவுள் இல்லை
என்பதற்கு
சரியான சாட்சி நம் காதல்..
இருந்திருந்தால்,
அவனை கும்பிடாத எனக்கு,
உன்னைப் போல் ஒருத்தியைக்
கொடுத்திருப்பானா??!!

8)நீ குழந்தை பெறும் முன்
நம் குழந்தையைப் பார்க்க
எனக்கு கோடி ஆசை எனினும்,
நீ குழந்தை பெற்ற பின்
உன்னை முதலில் பார்த்து
முத்தம் கொடுக்கவே
ஆசைப் படுகிறேன் நான்..

9)நீ தூங்கும் அழகை ரசித்து,
உனக்கு முத்தம் கொடுக்கலாம்
என நான் காத்திருக்கிறேன்..
நான் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டுத் தூங்கலாமென
நீ காத்திருக்கிறாய்..
நம் இருவருக்காகவும்
காதல் காத்திருக்கிறது..!!

10)நம் குழந்தைகளுக்கு
அப்பா நான்
அம்மா நீ..
நம் கவிதைகளுக்கு
அப்பா நீ
அம்மா நான்..!!

தேவதைக் காலம்1.)நான் உன்னைக் காதலிப்பதை
என் எதிர்த்த வீட்டுக்
குழந்தையிடம் யார் சொன்னது?
எப்போதும் என்னைப்
பார்த்தவுடன் அழுவது,
இன்று முத்தம் தந்து சிரிக்கிறது..

2)நான் பார்க்கும் போதெல்லாம்
என்னை கேலி செய்து
ஆட்டம் போடும் என் கண்ணாடி,
நீ என்னை
காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து
அடங்கிவிட்டது..

3)அழகான பெண்கள்
எத்தனையோ பேர்
என்னைப் பார்த்திருக்கிறார்கள்..
ஆனால்
என்னை நானே,
'அழகன்' என நம்புவது
நீ பார்க்கையில் மட்டுமே..

4)காதலிக்கும் முன்
கர்ப்பிணிப் பெண்களை
பார்த்திருக்கிறேன்..
காதலித்த பின் தான்
கர்ப்பிணிப் பெண்களை
ரசிக்கக் கற்றுகொண்டேன்..

5)உலக அழகிப் போட்டிகளை
நான் பார்ப்பதில்லை,
உலகத்தை அழகாக்குபவளே
நீதான் என
தெரிந்த பிறகு..

6)எதைக் கேட்டாலும்
கொடுப்பது மட்டும்
தேவதை அல்ல..
முத்தம் கேட்கும் போதெல்லாம்
"முடியாது போடா" சொல்லும்
நீயும் தேவதைதான்..

7)நிலவில் வாழ முடியுமா
என தெரியாது..
ஆனால்
நிலவுடன் வாழ முடியுமென
உன்னைக் காதலித்த
நொடியிலிருந்து தெரியும்..

8)உலகத்தின் காலம்
'கிருத்துவுக்கு முன்'',
'கிருத்துவுக்குப் பின்' என
பிரிக்கப்பட்டுள்ளது போல்,
என் காலம்,
'தேவதைக்கு முன்',
'தேவதைக்குப் பின்' என
பிரிக்கப்பட்டுள்ளது..

உயிர் நதி..


வாழ்க்கைப் பயணமென்றால்...
நான்...
பயணங்கள் போகாதவன்..
பயணமாகவே போவபன்...
அதனாலேயே பயண அலுப்பு
இல்லாதவன்...
என் பயணங்கள் எல்லாமே
என்னுள்ளே ஆரம்பித்து
என்னுள்ளே முடிபவை....
சில நேரங்களில் மூளையிலும்,
சில நேரங்களில் இதயத்தின் மூலையிலும்
நிகழ்பவை...
சில நேரங்களில் இரண்டிலுமே....!!
நல்லவேளை,
என் பயணத்தில்
காதல் உருவமாய் அல்லாமல்
அருவமாய் முளைத்துவிட்டது...
இல்லாவிட்டால் ஒரு ராட்சதனாய்,
உலகிலேயே பெரியவனாய்த் திரிந்திருப்பேன்...

பல நேரங்களில்,
எனக்கான பயணச்சீட்டுகளில் சில,
நான் இறங்க வேண்டிய இடத்திற்கு
முந்தைய இடத்திற்காக
எடுக்கப்பட்டதாகவே இருக்கிறது....
மீதி தூரத்தை எவனுடைய இடத்திலோ
பயணித்து முடிக்கிறேன்....
பயணம் ஒன்றுதான்...
பயணிப்பவன் தான் வேறு...

அல்லது,

எனக்கான பயணச்சீட்டுகளில் சில,
நான் இறங்க வேண்டிய இடத்திற்கு
அடுத்த இடத்திற்காக
எடுக்கபட்டதாகவே இருக்கிறது...
மீதி தூரத்தை என் இடத்தில்
எவனோபயணித்து முடிக்கிறான்..
பயணம் ஒன்றுதான்...
பயணிப்பவன் தான் வேறு...
என் பயணங்களில்,
உண்மைகள் சாலையோர மரங்களாகவும்,
பொய்கள் செருப்பாகவும் இருந்திருக்கின்றன...
மரங்கள் விழுந்ததும் உண்டு...
செருப்புகள் பிய்ந்ததும் உண்டு..
பயணங்கள் தடைபட்டதும் உண்டு..
பாதைகள் மாறியதும் உண்டு...!
பல அழகான பெண்கள்,
வழியில் வருகிறார்கள்...
காதலி வந்ததும்,
காணாமல் போகிறார்கள்...
பின்,
அவர்கள் வந்தாலும்
அழகாய்த் தெரியவில்லை....
பக்கத்தில் இருப்பவள் முன்
பணிப்பெண்களாய்த் தெரிகிறார்கள்...
பயணம் ஒன்றுதான்...
பாதைதான் வேறு...

விவிலியத்தின் 'மண்ணா' உணவுபோல்,
அடுத்த நாளே கெட்டுப் போகும்
உணவுகள் தான் எல்லாமே எனினும்,
அளவுக்கு மீறி சேமித்து வைக்கிறேன்...
பக்கத்தில் இருப்பவன்
பசியாய் இருப்பதைப் பார்த்தாலும் கூட....

என் வாழ்க்கைக்கான தாகமெல்லாம்
ஒரு பனித்துளியின் ஈரத்தில் தீர்ந்துவிடுகிறது...
ஆனாலும் அடுத்த பனித்துளி,
எனக்கான தாகத்தையும், தணிப்பையும்
சேர்த்தே கொண்டுவருகிறது....

அழகான பயணங்கள்...
கண்டிப்பாய் இவை ஒருவழிப் பயணங்கள்...
அவசரமாய் போவதில் விருப்பமில்லை...
நின்றும், ரசித்தும்,
கொஞ்சமே கொஞ்சமாய்
வாழ்ந்தும் செல்கிறேன்...

இப்படியேதான் போகின்றன
என் பயணங்கள்....
போகும் வழியில் பார்த்த எதுவும்
வரும் வழியில் பார்த்ததாய் நினைவில்லை..
பயணிகள் மாறி மாறி வருகிறார்கள்....
நிரந்தரமாய் உடனிருக்க
எவருக்கும் நேரமில்லை...
அவரவர்க்கு அவர் பயணம்...
ஆனால்,
நான் புறப்பட்டதும்,
வந்து சேர்ந்ததும் ஓரே இடம் தான்....
பயணம் ஒன்றுதான்,
பாதைதான் வேறு....!!

காதல் வாய்த்திருக்கிறது கொஞ்சம் சண்டையுடன்..இருதயத்தின் ஒருதயத்தை மட்டுமல்ல
மறுதயத்தையும் பார்க்க 'நினைக்கும்'....
இல்லை இல்லை....
பார்க்கத் 'தெரிந்த' சிலருக்கே
காதல் வாய்க்கிறது...
அப்படியே கொஞ்சம் உனக்கும்,
கொஞ்சம் எனக்கும்,
மொத்தமாய் நமக்கும்,
காதல் வாய்த்திருக்கிறது...

நாம் சண்டையிடும் போதெல்லாம்
அம்மாவிடம் ஊட்டிக் கொள்ள
அடம்பிடிக்கும் குழந்தையைப் போல்தான்
உன்னிடம் இருக்கிறேன் நான்...
எப்படியும் என்னை சமாதானம் செய்து
காதலை ஊட்டிவிட்டு விடுவாய்
என்ற நம்பிக்கையில்......
இதுவரைக்கும் இப்படித்தான்
இனிமேலும் அப்படித்தான்..!

நாம் சண்டையிடும் ஒவ்வோர் முறையும்
நான்,
உனக்கு எப்படித் தெரிகிறேனோ தெரியாது...
நீ,
எனக்கு உலகிலேயே அழகான ஆணாய்த்தான்
தெரிகிறாய்...
ஏனா?
எனக்கு சண்டையிடத்தான் தெரியும்
உனக்குத்தானே சமாதானம் செய்யவும் தெரியும்...!!

ஆனால்..
மறந்தும் 'நீ', என்னிடம் சண்டையிட்டு விடாதே
சத்தியமாய் எனக்கு சமாதானம் செய்யத் தெரியாது..
எனக்கு சண்டையிட மட்டுமெ காதல் கற்றுதந்திருக்கிறது...

நான் சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறேன்....
நீ சமாதானம் செய்துகொண்டேயிரு...
நாம் காதலித்துக் கொண்டேயிருப்போம்..
உலகம் அழகாகிக் கொண்டேயிருக்கட்டும்.......!!

Thursday, April 9, 2009

எட்டு மாதம் எனக்கு (ஈழம்)


எட்டு மாதம் எனக்கு
உயிர் இருப்பதை உணரும்
வயதில்லை..
தாயென்னும் உயிருக்குள் உறங்கும்
வயது...

தாய் சாப்பிட்ட உணவு செரிக்கும்
சத்தம் மட்டுமே தெரியுமெனக்கு..
என் செவி வலிக்குமோ என அஞ்சி
என் தாய்,
திரவமாய் குடித்ததும் தெரியுமெனக்கு..

திடீரென வெடிச்சத்தம்...
கருவறை திரைகளுடன் சேர்ந்து
முழுதாய் வளராத
என் செவிப்பறைகளும் கிழிந்தன....

தாயின் உடலில் இருந்து
குழந்தையின் தலைதானே வெளிவரும்!!??
எனக்கு என் முழு உடலும் வந்தது..விழுந்தது...
பிய்ந்து பிய்ந்து..
நைந்து நைந்து..

அதிகமாய் குங்குமப்பூ தின்றாயோ தாயே?
நான் சிவப்பாய்..
நீயோ அதைவிட சிவப்பாய்..
உனக்குப் பிரசவம் பார்த்தது வெடிகுண்டல்லவா?

என்னை அள்ளிக்கொள்ள, கொஞ்ச
நீ வளர்த்த கைகள்,
என் விரோதிகள் போல இருபதடி தூரத்தில்
வானம் பார்த்து சிதறிக் கிடக்கின்றன..

அம்மா..
நான் பால் சப்ப
நீ காத்த முலைகளில்,
நாய்கள் சீல் சப்ப
காத்திருக்கின்றன...

அம்மா...
உயிர்தானே? உடல்தானே? ரத்தம்தானே?
விட்டுத்தள்ளு...

மீண்டும் இந்த மண்ணில்,
உன் தமிழ் வயிற்றில் பிறக்கிறேன்...
பரிணாம வளர்ச்சியில் தேவைக்கேற்ப
உறுப்புகள் முளைக்குமாம்...
கண்டிப்பாய் அடுத்த பிறப்பில்
என் தோளில் துப்பாக்கி முளைக்கும்...
அஞ்சாதே...
மீண்டும் பிற..
என்னைப் பெற்றெடு...

எவ்வினத்திலும் கடைசி ஒருவன்
இருக்கும்வரை,
விடுதலைப் போராட்டங்கள்
வீழ்ந்துபோய் இருக்கவில்லை...
வென்றெடுக்காமல் என் பிறவிகள்
ஓயப்போவதில்லை...

அம்மா...
எனக்கு எட்டு மாதம்...
நான் உலகில் பிறக்கவில்லை..
விழுந்துவிட்டேன்...
விதைந்துவிட்டேன்..

எனக்கு எட்டே மாதம்,

எதுவும் செய்யாமல்
என் முதல் புகைப்படத்தை
அமைதியாய் பார்ப்பவர்களே.....
உங்கள் குழந்தைக்கு எத்தனை மாதம்????
Related Posts Plugin for WordPress, Blogger...