Tuesday, September 30, 2008

மசாலா படங்கள் கூடாது! ஏன்?


இந்தியத் திரையுலகின் இரண்டு முக்கிய உலகங்களான வடதிரையுலகம் (ஹிந்தி) மற்றும் தென் திரையுலகையும் (தெலுகு, தமிழ், கன்னடம், மலையாளம்), இவற்றுக்கும் அரசியலுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்ப்போம், வடஇந்திய ரசிகர்கள் புத்திசாலிகள், சற்று தெளிவானவர்கள். இந்தி சினிமாவின் SUPER STAR ஆக அவர்கள் ஏற்றுகொண்ட அமிதாப்பச்சனை அரசியலில் ஒன்றுமில்லாத குப்பையாக ஆக்கினார்கள். அரசியல் அறிவு கொஞ்சமும் இல்லாதவர்கள் அங்கு ஜெயிக்க மட்டுமல்ல, அரசியலில் இறங்கவே முடியாது. இதே நிலை தான் கேரளத்திலும். அதனால் இவைகள் இரண்டையும் இந்தத் தலைப்பிலிருந்து தள்ளி வைத்துத் தொடர்வோம்.
தென் அரசியல் மற்றும் நடிகர்கள், ஒரு பார்வை:

என்.டி.ராமாராவ்: என்.டி.ஆர், கடவுளாக நடித்து நடித்து கடவுளாகவே மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டவர். அரசியலில் பெருவெற்றி பெற்றவர். தெலுகு மசாலா படங்களின் தந்தை.

எம்.சி.ராமச்சந்திரன்: ஏழைகளின் தோழனாக நடித்து நடித்து அப்படியே நம்பப்பட்டவர். கண்ணதாசன், வாலியின் வரிகளை தன் வரிகளாகவே மக்கள் நம்பும் அளவிற்கு மக்களை மடையர்கள் ஆக்கியவர். இதற்கு ஒரு உதாரணம் உண்டு. தொண்டையில் சுடப்பட்டபின் இவர் நடித்த படத்தைப் பார்க்கும் ஒரு ரசிகன் மற்றவனிடம் சொல்கிறான், "வாத்தியார் பாட்டெல்லாம் நல்லாத்தான்பா பாடுறாரு, ஆனா பேச்சு தான் ஒரு மாதிரியா பேசுறாரு!!!!!" என்று. எம்.சி.ஆர் தமிழ் மசாலாப்படங்களின் தந்தை.

ராஜ்குமார்: கன்னட திரையுலகின் முடிசூடா மன்னன். அரசியலில் இறங்காமலே அரசியல் பண்ணத்தெரிந்த நரி. இவர் இயற்கையாய் இறந்த போது கூட இவரின் ரசிக மந்தைகள் தமிழர்களை தாக்கியதை யாரும் மறந்திடோம். இந்த நரி புகழ்பெற்றதும் மசாலாப்படங்களின் மூலம் தான்.

சிவாசி கணேசன்: மாபெரும் நடிகன். தமிழ் திரையுலகின் முதல் முழு நடிகன். மசாலாப் படங்களில் அவ்வளவு நாட்டமில்லாதவர். இளம் வயதில் கூட முதுமையான தோற்றத்தில் நடிக்கும் அளவுக்கு நடிப்பின் மேல் மட்டும் அக்கறை கொண்டவர். எம்.சி.ஆருக்கு நிகராக ரசிகர்கள் இருந்தாலும் அரசியலில் மண்ணைக் கவ்வியவர்.

ரசினிகாந்த்: எம்.சி.ஆரின் வாரிசு. ஆனால் தன் செல்வாக்கை சரியான நேரத்தில் அரசியலில் பயன்படுத்த தெரியாததால் அரசியலில் வரமுடியாமலே போனவர். 1996ல் இவர் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாய் முதல்வர் ஆகியிருப்பார் என பெருவாரியான அரசியல் விமர்சகர்கள் கணித்தார்கள்.

பாக்கியராசு: மிகச்சிறந்த புத்திசாலி. திறமையான கலைஞர். ஆனால் அரசியலில் தோற்றவர். மசாலாப் படங்களுக்கு அப்பாற்பட்ட படங்கள் இவருடையது.

விசயகாந்த்: 'தமிழை', 'தமில்' என உச்சரிக்கும் அரசியல் நடிகர். ஏழைகளின் தோழனாகவும், இந்தியநாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் வீரனாகவும் தன் திரையுலக வாழ்க்கையை கழித்தவர். வசன உபயம், இப்ராகீம் ராவுத்தர். அரசியலில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்.


சரி. மேலே உள்ள விடயங்களை ஆராய்வதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. அரசியலில் வெற்றி பெற மசாலாப் படங்களின் மூலம் மக்களை ஏமாற்ற தெரிதல் அவசியமென்று. அமெரிக்கா போன்றோ, வட இந்தியா போன்றோ தெளிவான ரசிகர்கள் நம்மூரில் இல்லை. சினிமாவில் காட்டப்படும் கதாப்பாத்திரங்களையே உண்மையென நம்பும் அளவிற்கு ஆட்டு மந்தை ரசிகர்கள் இங்கு அதிகம். அதனால்தான் நேற்று மழையில் முளைத்த 'இளைய தளபதி(!!)' விசய் கூட தன் அரசியலுக்கு முன்னோட்டமாய், ரசிகர்மன்ற கொடியை அறிமுகம் செய்துள்ளார். ஆமா, தெரியாமல்தான் கேட்கிறேன், ரசிகர் மன்றத்துக்கு எதுக்கு மக்களே கொடி??????? இந்தக் கேள்வியெல்லாம் நமக்குத் தோன்றாது. ஏனெனில் 'வடு மாங்கா ஊறுதுங்கோ' என் அவன் ஆடினால் நம் வீட்டு 3 வயது குழந்தையை ஆடவிட்டு ரசிக்கும் கூட்டம் நம் கூட்டம். மெதுவாய்த் திருந்தும் என நம்புவோம்.

அருமை சினிமா ரசிகர்களே, மசாலா படங்களில் நடித்து, PUNCH DIALOGUE எனப்படும் எவரோ எழுதிக் கொடுக்கும் அதிரடி வசனங்களைப் பேசி நடிக்கும் ஒவ்வொரு நடிகனுக்குமே அரசியல் ஆசை வந்து ஒட்டிக்கொள்கிறது. அவர்கள் என்செய்வார்கள் பாவம், தென்னிந்திய வரலாறு அப்படிப்பட்டது. நீங்கள் மசாலாப் படங்களை திரையரங்குகளுக்கு ஓடிச் சென்று முட்டிமோதி பார்த்து ஆதரவு தரும் வரை இந்த அவலம் தொடரும். ஆனால், விசயின் ஆட்டத்தைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது, ரசினியைப் பார்த்தால் குழந்தைப் பிறக்கிறது எனப் பிதற்றும் மக்களே உங்களைத் திருத்த முடியாது. நாளைக்கு விசய் ஓட்டுக் கேட்டு குத்துப்பாட்டுக்கு ஆடினாலும் விசிலடித்துக் கொண்டே ஓட்டுப் போடுவீர்கள். நான் கொஞ்சமாவது சிந்திக்க நினைக்கும் மக்களுக்கு இதைச் சொல்கிறேன். அடுத்தமுறை மசாலாப் படங்களைப் பார்க்கப்போகும் போது ஒருமுறை நிதானமாய் யோசியுங்கள். அப்படி பார்த்தே ஆகவேண்டுமென்றால் திருட்டு 'DVD'யில் பாருங்கள். கதாநாயகர்களின் வசனங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சிரியுங்கள்...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...