Thursday, October 23, 2008

தீபாவளி ஒழியட்டும். ஏன்?


தமிழன் யார்? புராணங்களில் அசுரன், ராட்சதன்.

தீபாவளி என்றால் என்ன? தீபாவளின்னா தமிழனோட கருமாதி, தமிழனோட திதி.

நரகாசுரன் யாரு? புராணங்களில் உள்ள ஆரிய, திராவிட போர்கதைகளில், திராவிடர்களின் பிரதிநிதி அவன். அவனை மோசமானவனாகவும், கொடூரனாகவும் சித்தரித்தது, அந்த புராணங்களையெல்லாம் படைத்த ஆரிய மிருகங்கள். இதை நான் சொல்லவில்லை. "புராணங்கள் எல்லாமே ஆரிய-திராவிட போரின் புனைவுக் கதைகளே" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஆரியர், சவகர்லால் நேரு சொல்லியிருக்கிறார். நரகாசுரன் யார்?? பூணூல் தரிக்கா திராவிட மன்னன். அவனின் மரணத்தை, திராவிட இன மன்னனின் சாவை, நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நாம் இன்னும் இரையாகத்தான் வேண்டுமா?? சுயபுத்தியுடன் சிந்தியுங்கள். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உங்களிடம் ஏதெதோ சொல்லி உங்களை சிறு வயதில் இருந்து தீபாவளி கொண்டாட வைத்திருக்கலாம். ஆனால் சிந்திக்கவேண்டும் தோழர்களே. சற்று சிந்திக்கவேண்டும். தன் இனத்தின் தோல்வியை புராணத்தில் கண்டு, அதற்காக பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். இதை விட அசிங்கம் ஏதும் உள்ளதா? நாம் இதைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா? சுரணை என்ற ஓர் உணர்வேண்டும் தமிழர்களே. அதற்கு சுயமாய்ச் சிந்தித்தல் வேண்டும். சுயமாய்ச் சிந்திக்காத எதற்கும் சுரணை வந்ததாய் சரித்திரமில்லை தோழர்களே.
நீங்கள் இதைப் படிக்கலாம், உங்களுக்கு உறைக்கவும் செய்யலாம், ஆனால் தீபாவளியை நீங்கள் புறக்கணிக்க எத்தனிக்கும் போது உங்கள் தாயோ, தந்தையோ இப்படிச் சொல்வார்கள், "அதெல்லாம் வெட்டிப் பேச்சு. நமக்கு ஒத்துவராது. அதையெல்லாம் கேட்காதே" என்று. நீங்களும் சட்டென மாறிவிடுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், சுயமாய்ச் சிந்தியுங்கள் தோழர்களே. சிந்தியுங்கள். சிந்திப்பதால் தான் நீங்களும் நானும் மனிதர்கள். அது இல்லையேல்நாய் போல், தெருப் பன்றி போல் நாம் அடிமைகள். வெறும் அடிமைகள்.
தீபாவளியைப் புறக்கணிப்போம். எவனுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லாதீர்கள். கருமாதிக்கு வாழ்த்துச் சொல்லுவீர்களா?? அதுபோல் தான் இதுவும். தீபாவளி அன்று தமிழகம் எழவு வீடு நண்பர்களே. தீபாவளி என்றால் தமிழன் வீட்டில் ஒரு துக்கநாள். தயவு செய்து கொண்டாடாதீர்கள். உங்கள் இனம் அழிக்கப்பட்டதாய்ச் சொன்ன ஆரியர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்.
தீபாவளி ஒழிக. தமிழினத்தின் சுயமரியாதையும், சுரணையும் வாழ்க.

Tuesday, September 30, 2008

மசாலா படங்கள் கூடாது! ஏன்?


இந்தியத் திரையுலகின் இரண்டு முக்கிய உலகங்களான வடதிரையுலகம் (ஹிந்தி) மற்றும் தென் திரையுலகையும் (தெலுகு, தமிழ், கன்னடம், மலையாளம்), இவற்றுக்கும் அரசியலுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்ப்போம், வடஇந்திய ரசிகர்கள் புத்திசாலிகள், சற்று தெளிவானவர்கள். இந்தி சினிமாவின் SUPER STAR ஆக அவர்கள் ஏற்றுகொண்ட அமிதாப்பச்சனை அரசியலில் ஒன்றுமில்லாத குப்பையாக ஆக்கினார்கள். அரசியல் அறிவு கொஞ்சமும் இல்லாதவர்கள் அங்கு ஜெயிக்க மட்டுமல்ல, அரசியலில் இறங்கவே முடியாது. இதே நிலை தான் கேரளத்திலும். அதனால் இவைகள் இரண்டையும் இந்தத் தலைப்பிலிருந்து தள்ளி வைத்துத் தொடர்வோம்.
தென் அரசியல் மற்றும் நடிகர்கள், ஒரு பார்வை:

என்.டி.ராமாராவ்: என்.டி.ஆர், கடவுளாக நடித்து நடித்து கடவுளாகவே மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டவர். அரசியலில் பெருவெற்றி பெற்றவர். தெலுகு மசாலா படங்களின் தந்தை.

எம்.சி.ராமச்சந்திரன்: ஏழைகளின் தோழனாக நடித்து நடித்து அப்படியே நம்பப்பட்டவர். கண்ணதாசன், வாலியின் வரிகளை தன் வரிகளாகவே மக்கள் நம்பும் அளவிற்கு மக்களை மடையர்கள் ஆக்கியவர். இதற்கு ஒரு உதாரணம் உண்டு. தொண்டையில் சுடப்பட்டபின் இவர் நடித்த படத்தைப் பார்க்கும் ஒரு ரசிகன் மற்றவனிடம் சொல்கிறான், "வாத்தியார் பாட்டெல்லாம் நல்லாத்தான்பா பாடுறாரு, ஆனா பேச்சு தான் ஒரு மாதிரியா பேசுறாரு!!!!!" என்று. எம்.சி.ஆர் தமிழ் மசாலாப்படங்களின் தந்தை.

ராஜ்குமார்: கன்னட திரையுலகின் முடிசூடா மன்னன். அரசியலில் இறங்காமலே அரசியல் பண்ணத்தெரிந்த நரி. இவர் இயற்கையாய் இறந்த போது கூட இவரின் ரசிக மந்தைகள் தமிழர்களை தாக்கியதை யாரும் மறந்திடோம். இந்த நரி புகழ்பெற்றதும் மசாலாப்படங்களின் மூலம் தான்.

சிவாசி கணேசன்: மாபெரும் நடிகன். தமிழ் திரையுலகின் முதல் முழு நடிகன். மசாலாப் படங்களில் அவ்வளவு நாட்டமில்லாதவர். இளம் வயதில் கூட முதுமையான தோற்றத்தில் நடிக்கும் அளவுக்கு நடிப்பின் மேல் மட்டும் அக்கறை கொண்டவர். எம்.சி.ஆருக்கு நிகராக ரசிகர்கள் இருந்தாலும் அரசியலில் மண்ணைக் கவ்வியவர்.

ரசினிகாந்த்: எம்.சி.ஆரின் வாரிசு. ஆனால் தன் செல்வாக்கை சரியான நேரத்தில் அரசியலில் பயன்படுத்த தெரியாததால் அரசியலில் வரமுடியாமலே போனவர். 1996ல் இவர் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாய் முதல்வர் ஆகியிருப்பார் என பெருவாரியான அரசியல் விமர்சகர்கள் கணித்தார்கள்.

பாக்கியராசு: மிகச்சிறந்த புத்திசாலி. திறமையான கலைஞர். ஆனால் அரசியலில் தோற்றவர். மசாலாப் படங்களுக்கு அப்பாற்பட்ட படங்கள் இவருடையது.

விசயகாந்த்: 'தமிழை', 'தமில்' என உச்சரிக்கும் அரசியல் நடிகர். ஏழைகளின் தோழனாகவும், இந்தியநாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் வீரனாகவும் தன் திரையுலக வாழ்க்கையை கழித்தவர். வசன உபயம், இப்ராகீம் ராவுத்தர். அரசியலில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்.


சரி. மேலே உள்ள விடயங்களை ஆராய்வதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. அரசியலில் வெற்றி பெற மசாலாப் படங்களின் மூலம் மக்களை ஏமாற்ற தெரிதல் அவசியமென்று. அமெரிக்கா போன்றோ, வட இந்தியா போன்றோ தெளிவான ரசிகர்கள் நம்மூரில் இல்லை. சினிமாவில் காட்டப்படும் கதாப்பாத்திரங்களையே உண்மையென நம்பும் அளவிற்கு ஆட்டு மந்தை ரசிகர்கள் இங்கு அதிகம். அதனால்தான் நேற்று மழையில் முளைத்த 'இளைய தளபதி(!!)' விசய் கூட தன் அரசியலுக்கு முன்னோட்டமாய், ரசிகர்மன்ற கொடியை அறிமுகம் செய்துள்ளார். ஆமா, தெரியாமல்தான் கேட்கிறேன், ரசிகர் மன்றத்துக்கு எதுக்கு மக்களே கொடி??????? இந்தக் கேள்வியெல்லாம் நமக்குத் தோன்றாது. ஏனெனில் 'வடு மாங்கா ஊறுதுங்கோ' என் அவன் ஆடினால் நம் வீட்டு 3 வயது குழந்தையை ஆடவிட்டு ரசிக்கும் கூட்டம் நம் கூட்டம். மெதுவாய்த் திருந்தும் என நம்புவோம்.

அருமை சினிமா ரசிகர்களே, மசாலா படங்களில் நடித்து, PUNCH DIALOGUE எனப்படும் எவரோ எழுதிக் கொடுக்கும் அதிரடி வசனங்களைப் பேசி நடிக்கும் ஒவ்வொரு நடிகனுக்குமே அரசியல் ஆசை வந்து ஒட்டிக்கொள்கிறது. அவர்கள் என்செய்வார்கள் பாவம், தென்னிந்திய வரலாறு அப்படிப்பட்டது. நீங்கள் மசாலாப் படங்களை திரையரங்குகளுக்கு ஓடிச் சென்று முட்டிமோதி பார்த்து ஆதரவு தரும் வரை இந்த அவலம் தொடரும். ஆனால், விசயின் ஆட்டத்தைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது, ரசினியைப் பார்த்தால் குழந்தைப் பிறக்கிறது எனப் பிதற்றும் மக்களே உங்களைத் திருத்த முடியாது. நாளைக்கு விசய் ஓட்டுக் கேட்டு குத்துப்பாட்டுக்கு ஆடினாலும் விசிலடித்துக் கொண்டே ஓட்டுப் போடுவீர்கள். நான் கொஞ்சமாவது சிந்திக்க நினைக்கும் மக்களுக்கு இதைச் சொல்கிறேன். அடுத்தமுறை மசாலாப் படங்களைப் பார்க்கப்போகும் போது ஒருமுறை நிதானமாய் யோசியுங்கள். அப்படி பார்த்தே ஆகவேண்டுமென்றால் திருட்டு 'DVD'யில் பாருங்கள். கதாநாயகர்களின் வசனங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சிரியுங்கள்...!!!

Friday, August 8, 2008

நண்பர் ஞாநிக்கு.
மற்ற விஷயங்கள், விமர்சனங்கள் பற்றியெல்லாம் விட்டுவிட்டு, கலைஞரின் முதுமையை நீங்கள் விமர்சித்த அல்லது அக்கறை காட்டிய விதம் மற்றும் நிகழ்ச்சியைப் பற்றி மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள்.

கருணாநிதி என்பவரின் முதுமை, மூத்திரம் போகும் பழக்கம் பற்றியெல்லாம் படு பகிரங்கமாக ஆ.வியில் ஆவி பறக்க எழுதியிருந்தீர்கள். நல்லது. அத்தனையும் உண்மையாகக் கூட இருக்கலாம். கருணாநிதிக்கு முதுமை ஒரு பிரச்சினை தான். அதுபோல் ஜெ.வுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சினை. அதன் பக்க, மற்றும் பின் விளைவுகள் தான் அவர் பேசும் மேடையில் குளிர்சாதன கக்கூஸ் அமைக்கும் அளவிற்கு அவரைச் செல்ல வைக்கிறது. இன்றுவரை கருணாதிக்கு ஆகும் கூட்டச் செலவைவிட ஜெ.வுக்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அவர் நாட்டுக்காக உழைக்க வேண்டும்? ஓ.பியையே (ஓ.பன்னீர் செல்வத்தையே) ஓ.டி (ஓவர் டைம்) பார்க்க சொல்லியிருக்கலாமே?? இதெல்லாம் நீங்கள் எழுதவில்லை. ஒருவேளை ஜெ.வைப் பற்றி அக்கறைப்படும் அளவிற்கு அவர் முக்கியமானவரில்லை என நீங்கள் நினைத்து அவரை விட்டிருக்கலாம் என எதையும் நம்பும் என் இதயம் சொல்கிறது. ஒரு நாட்டின் முதல்வரின், தற்போதைய தமிழர்களின் பிரதிநிதியின் மூத்திரப் பழக்கத்தைக் கூட விட்டுவைக்காமல், உலகெல்லாம் வாசிக்கப்படும் ஆ.வியில் எழுதிய உங்கள் தன்மை என் 'எதையும் நம்பும் இதயத்தை'யே யோசிக்க வைக்கிறது. அதாவது, "ஞாநி ஸ்டாலினை சந்திக்க நினைத்தால் சந்திக்க முடியும், பேச முடியும், ஏனென்றால் ஞாநி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அப்படியொரு சந்திப்பின் போது ஸ்டாலினிடம் கருணாநிதியைப் பற்றியும் அவர் உடல்நிலை பற்றியும் பேசியிருக்கலாமே??" என கேட்கிறது என் இதயம். இந்த வயதான காலத்திலும் உழைத்துக் கொண்டிருக்கும் தனது மூத்திரப் பழக்கத்தைப் பற்றி வெளிவந்த கட்டுரையைப் படித்த அந்த தலைவனுக்கு எப்படி வலித்திருக்கும்?? (ஆனால் இதெல்லாம் நகத்தைக் கடிக்கும் கொசு என அவருக்கு தெரியும் என்பது வேறு விஷயம்.) உங்களின் விசிறியாய் உங்களைப் படித்த எனக்கு 'அந்த' கட்டுரை ஆநாகரீகத்தின் உச்சமாகப் பட்டது.

நீங்கள் ஒரு அரசியல் விமர்சகர். ஒவ்வொரு விமர்சகனின் கையிலும் ஒரு தராசு உண்டு. உங்கள் கையில் உள்ள தராசு ஒரு பக்கம் மட்டும் எடை ஏறிக்கொண்டே போவதுதான் பிரச்சினை. தராசின் மறுபக்கம் எடை ஏற்ற எத்துணையோ விஷயங்கள் இருந்தும் நீங்கள் அவற்றை கையில் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது உங்களின் எழுத்தாற்றலை (ஆற்றலை மட்டும்) ரசிக்கும் என்னைப் போன்ற பலருக்கு வேதனை தருகிறது, எங்களை உங்களின் கொள்கைகள் பற்றி யோசிக்க வைக்கிறது. ஜெயா டிவியில் ரபி பெர்னாட் நடத்தும் நிகழ்ச்சி ஒரு 'தலையாட்டி பொம்மை' நிகழ்ச்சி. அதைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அதில் ஏன் பங்கு கொண்டீர்கள்?? இப்படி பல கேள்விகள் உண்டு. உங்கள் கையில் இருப்பது இரு பக்கம் கொண்ட தராசு என எண்ணிக்கொண்டிருக்கும் சிலரின் நம்பிக்கையின் மீது கல்லெறிகிறீர்கள். அதை விட்டுவிட்டு உங்கள் கையில் இருப்பது 'சிலரை' மட்டுமே ஆட்டிவிடும் ஒரு பக்கம் மட்டுமே கொண்ட தொட்டில் என சொல்லிவிடுங்களேன், சற்று தெளிவுபட...

Sunday, July 27, 2008

மோடியின் வெற்றி
அமெரிக்க அரசால் "இவர் இங்கு வந்தால் தீவிரவாதமும் வரும்" என குற்றம் சாட்டப்பட்டு, 'விசா' மறுக்கப்பட்ட ஒரே இந்திய முதல்வர் 'மோடி' மீண்டும் பெறும் வெற்றி பெற்று முதல்வர் ஆகியுள்ளார். காரணம் தொழிற்வளர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு கொடூரமான மதவெறி பிடித்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னும் மக்கள் அவரை முதல்வர் ஆக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் அங்குள்ள மக்கள் (இந்துக்கள்) மக்களா? மாக்களா? என்ற கேள்வியும் எழுகிறது. 'ரோம்' நகரம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ கூட பிடில் இசையைதான் ரசித்தானே தவிர, ரோம் நகரம் எரிவதை ரசிக்கவில்லை. ஆனால் இந்த மோடி, இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை, கற்பழிக்கப்படுவதை, சூறையாடப்படுவதை ரசித்த கொடியவர் என அவரின் அள்ளக்கை சாமியார்களே(??!!) வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் ஒன்று "மோடி மட்டும் அமைச்சராக இல்லையென்றால், எங்களுடன் சேர்ந்து குண்டுகள் வீசியிருப்பார்" என்ற வரி..!! இந்த நிலையில் அவர் முதல்வர் ஆகியுள்ளது மகா கேவலமான விஷயம். பொதுவாக நாட்டில் நடக்கும் கொடூரங்களுக்கும், கெடுதல்களுக்கும் தேர்தலல ஒரு தீர்வாக சொல்வதுண்டு. ஆனால் மக்களும் மதக் கலவரங்களுக்கு துணை போய் ஓட்டுப் போட்டது இதுவே முதல் முறை. இந்தியா என்ற நாடு(??!!) நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகளின் காலத்திற்கு போய் விடுமோ என்ற அச்சத்தையும் மோடியின் இந்த வெற்றி ஏற்படுத்தியுள்ளது. இந்த லச்சணத்தில் செல்வி.ஜெயலலிதா, மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனம் இனத்தைச் சேரும்..!! இதெல்லாம் எங்உ போய் முடியுமோ??!! ஆனால் பெரியார் பிறந்த மண்ணில், இந்துத்துவ எண்ணங்களுடன் யாரும் நடமாடவே முடியாது என நம் இளைஞர்கள் உறுதிபூண வேண்டிய நேரமிது..

Friday, April 4, 2008

திருநங்கைகளும் நாமும்..
நான் பலமுறை அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளை கண்டதுண்டு. அவர்கள் என்னிடம் அடிக்காத குறையாக, கற்பழிக்காத குறையாக பிச்சை கேட்டதுண்டு. நான் அருவெறுப்புப் பட்டுக்கொண்டே கொடுத்ததும் உண்டு. இவர்கள் ஏன் கை ஒடிந்தவர்கள் போன்றோ, கால் ஒடிந்தவர்கள் போன்றோ அடக்கமாக, கெஞ்சிக் கதறி பிச்சை எடுப்பதில்லை? அரற்றி, மிரட்டி, உரசித் தேய்த்து பிச்சை(?) எடுக்கிறார்கள், அதாவது பிச்சையை பிடுங்குகிறார்கள்? யோசித்திருக்கிறோமா?? இல்லை அல்லது தெரியவில்லை. அரவாணிகள் என்பவர்கள் இந்த சமூகத்தில் யார்? தெரியவில்லை. அவர்களின் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கையில் நம் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களை பெண்கள் பகுதியில் சேர்ப்பதா, அல்லது ஊனமுற்றோர் என (அதாவது உளவியல் மற்றும் உயிரியல் ரீதியாக) எடுத்துக்கொள்வதா? தெரியவேயில்லை.
அரவாணிகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒரு பாலினம். சிலபேர் ஆண்களாக பிறந்து பெண்களாக ஆகிறார்கள். சிலர் நேர்மாறு. இதற்கு ஒரே காரணம் உரியியல் அல்லது மரபணு கோளாறு. இதற்கு யாரை குற்றம் சொல்வது? இயற்கையை அன்றி வேறு யாரையுமே சொல்ல முடியாது. ஆனால் குற்றவாளிகளாக சமூகத்தில் நிறுத்தப்படுபவர்கள் இயற்கையால் பாரப்ட்சம் பார்க்கப்பட்ட அரவாணிகள். தங்களின் மனநிலையோடு பருவ வயதில் ஒரு யுத்தமே நடத்தி தோற்று போன அப்பாவிகள். தன் குழந்தைக்கு கையில்லை, காலில்லை, வாயில்லை, கண்ணில்லை என்றால் தங்கள் கண் போல பாதுகாக்கும் பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு பாலினம் இல்லை என தெரியவந்தால் மிரண்டு போய் அரள்கிறார்கள். அந்த குழந்தையை குற்றவாளியாக்கி தண்டிக்கிறார்கள். சூழ்நிலை இப்படி இருக்கும் போது, சமூகத்தில் உடல் ஊனமுற்ற, வாழ தன்னம்பிக்கையில்லாமல் பிச்சையெடுக்கும் சிலரைப் போலவே 'இவர்களும்', அடங்கி ஒடுங்கி கெஞ்சிக் கதறி பிச்சையெடுக்க வேண்டும் என நாம் நினைப்பது எவ்வகையில் நியாயம்? இவர்களின் அரட்டல்களிலும், மிரட்டல்களிலும் ஒளிந்திருப்பது, தங்களுக்கு பாலின குறைபாடு ஒன்றை தவிர அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்த சமூகம் தங்களை பிச்சையெடுக்க வைத்துவிட்டதே என்ற கோவம் தான்.
இவர்கள் நம் சக மனிதர்கள். அன்பு, கோவம், அறிவு, நட்பு, கவுரவம், உழைப்பு, மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று என அத்தனையும் கொண்ட சாதாரண மனிதர்கள். ஆனால் இந்த சமூகத்தில் அவர்கள் அப்படி நடத்தப்படுகிறார்களா? ஒரு அரவாணிக்கு நம் அலுவலகத்தில் வேலைக்கு சிபாரிசு செய்ய, அல்லது நம் அடுமனையில் சமைக்கும் வேலை கொடுக்க, அல்லது ஒரு நண்பன் என சமூகத்தில் அறிமுகப்படுத்த நம்மில் எத்தனை பேருக்கு மனதில் துணிவும், தெம்பும் உண்டு??!!
இப்போது நான் முதலில் கேட்ட கேள்விகளை படித்துப் பாருங்கள். ஓரளவுக்கு விடை தெரியும். ஆனால் அவர்கள் என்னவிதமாக இந்த சமூகத்தில், அதாவது ஆணாகவா, பெண்ணாகவா, மூன்றாம் பாலினமாகவா அல்லது ஊனமுற்றவர்களாகவா அல்லது எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பது என் கருத்து. உங்கள் கருத்து?!!
Related Posts Plugin for WordPress, Blogger...